தஞ்சை: விவசாயிகளுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 27 -வது மாநில மாநாடு நேற்று தஞ்சாவூரில் தொடங்கியது. மாநாட்டுக்கு முன்னாள் எம்எல்ஏ எஸ்.குணசேகரன், மாநில துணைத் தலைவர் எம்.இலகுமய்யா, மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.செல்லவேல் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சோ.பாஸ்கர் வரவேற்றார். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய தலைவர் ராஜன் கிஷ்சி சாகர் மாநாட்டை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன், ஏஐடியுசி தமிழ்நாடு பொதுச் செயலாளர் ம.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர்கள், பி.எஸ்.மாசிலாமணி, சாமி.நடராஜன், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் அ.பாஸ்கர், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர்.
மாநாட்டில், விளைபொருட்களுக்கு மத்திய அரசு உடனடியாக குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக கொண்டு வர வேண்டும். கோயில் மடம், மத நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளை, குடியிருப்பாளர்களை நில வெளியேற்றம் செய்யக் கூடாது. சாகுபடி மற்றும் குடியுரிமை வழங்கி, பாதுகாக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு எதிராக பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-ஐ திரும்ப பெற வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை குறைக்காமல் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். வேளாண் பயிர்க் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். மத்திய அரசின் வேளாண் சந்தைப்படுத்தும் கொள்கை வரவு திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதில், இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.ராமச்சந்திரன் நன்றி கூறினார். இந்த மாநாடு இன்று (பிப்.21) நிறைவு பெறுகிறது.