புதுக்கோட்டை: அரிமளம் அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட உதவித் தலைமை ஆசிரியரை, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மாணவர்கள், பெற்றோர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரிமளம் அருகேயுள்ள ஒத்தப்புலிகுடியிருப்பு அரசு உயர்நிலைப் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் பெருமாள்(58). இவர், அப்பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியராகவும் இருந்தார். இதனிடையே, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், மாணவிகளைப் பயன்படுத்தி அவர் மீது பொய்ப் புகார் அளிக்க வைத்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் மாணவ- மாணவிகள், பெற்றோர், கிராமத்தினர் ஆகியோர் திரண்டு அரிமளம்- கே.புதுப்பட்டி சாலையில் ஒத்தப்புலிக் குடியிருப்பு பகுதியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாணவ- மாணவிகள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்றதால், நேற்று வகுப்புகள் நடைபெறவில்லை. தகவலறிந்து புதுக்கோட்டை கோட்டாட்சியர் ஐஸ்வர்யா மற்றும் அரிமளம் போலீஸார் சென்று பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர். இந்த மறியல் காரணமாக அரிமளம்- கே.புதுப்பட்டி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.