கரூர்: ஆழ்துளைக் கிணறு தூர் வாரும் வாகனம் மின் கம்பியில் உரசியதில் அந்த வாகன உரிமையாளர் உட்பட 2 பேர் நேற்று உயிரிழந்தனர்.
கோடைகாலம் நெருங்குவதையொட்டி, கரூர் மாவட்டம் க.பரமத்தியில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை சீரமைக்கும் பணி, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், முன்னூர் கிரஷர்மேடு பகுதியில் நேற்று ஆழ்துளை கிணறு தூர் வாரும் பணியில் முன்னூரைச் சேர்ந்த பாலு (45) தனது ஆழ்துளைக் கிணறு தூர் வாரும் வாகனத்துடன், நிமித்தப்பட்டியைச் சேர்ந்த சதீஷுடம் (32) ஈடுபட்டிருந்தார்.
அப்போது, ஆழ்துளைக் கிணற்றில் குழாயை மேலே தூக்கியபோது, மின் கம்பி மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து 2 பேரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து க.பரமத்தி போலீஸார் சென்று 2 பேரின் உடல்களையும் எடுத்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.