சென்னை: சென்னையில் 2,500 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார். தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் திட்டப் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை செனாய் நகரில் நேற்று நடைபெற்றது.
வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2,500 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் இந்த மூன்றும்தான் ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவை. இந்த மூன்றையும் ஒரு மனிதனுக்கு கிடைப்பதை உறுதி செய்வதுதான் திராவிட மாடல் அரசு. இந்த இலக்கை நோக்கியே உண்ண உணவுக்காக ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்கினார். உடுத்த உடைக்காக பொங்கலுக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார்.
அடுத்ததாக மக்களுக்கு ‘இருக்க இடம்’ என்பதை நோக்கி முதல்வரின் உத்தரவின்படி வீட்டுமனைப் பட்டாக்களை வழங்குவதற்காக வருவாய்த்துறை அமைச்சர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு, இன்றைக்கு 89,388 பட்டாக்கள் சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வழங்கப்பட்டிருக்கின்றன. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் நகர பகுதிகளில் மேலும், 86 ஆயிரம் பட்டாக்களை 6 மாத காலத்துக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
4 ஆண்டில் 12.29 லட்சம் பட்டா: இதில் சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் 29,187 பேருக்கும், மதுரை, நெல்லை போன்ற நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் 57,084 பேருக்கும் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில் திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 12.29 லட்சம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. திராவிட இயக்கம் இல்லாமல் போயிருந்தால் நாம் முகவரியின்றி, கல்வி, வேலைவாய்ப்பற்ற மனிதர்களாகத்தான் இருந்திருப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் ஜெ.குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, எம்எல்ஏ.க்கள் எஸ்.சுதர்சனம், தாயகம் கவி, எம்.கே.மோகன், பரந்தாமன், எழிலன், வெற்றி அழகன், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, ஹசன் மவுலானா, வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன், வருவாய்த்துறை செயலர் பி.அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.