“கொசு கடித்தால் தாங்க முடியாது...” - ஓபிஎஸ் மீதான ஜெயகுமாரின் விமர்சனத்துக்கு புகழேந்தி பதிலடி


புகழேந்தி | கோப்புப்படம்

மதுரை: கொசு கடித்தால் அவரால் தாங்க முடியாது என ஓபிஎஸ் குறித்து விமர்சித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயகுமாருக்கு மதுரையில் பெங்களூரு புகழேந்தி பதிலடி கொடுத்தார்.

சென்னையில் இருந்து மதுரை வந்த அதிமுக தொண்டர் அணி மீட்புக் குழுவைச் நிர்வாகி பெங்களூரு புகழேந்தி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசுக்கு உரிய பணத்தைக் கேட்டால் நாங்கள் கொண்டு வரும் கல்வித்திட்டத்தை நமது தலையில் மத்திய அரசு புகுத்துகிறது.

அண்ணாமலை போன்றவர்களுக்கு வரலாறு சொல்லித் தரவேண்டும். உலகத்திலேயே மொழிக்காக போராடியது தமிழகம் மொழி விஷயத்தில் கட்சி வேறுபாடு இன்றி சந்திக்க தயாராக வேண்டும். தமிழக அரசு முடிவெடுத்தால் ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற நிலை ஏற்படும். பாஜக தமிழுக்கு இணக்கமாக குரல் கொடுத்தால் மட்டுமே கால் ஊன்ற முடியும். வடக்கில் இருந்து வருவோர் தமிழை கற்றுக் கொண்டு அழகாக பேசுகின்றனர். ஆந்திரா, கர்நாடகா சென்றால் அங்கு இந்தி பேசுகின்றனர். மொழி விவகாரத்தில் முதல்வருக்கு ஆதரவை தருவோம்.

அதிமுகவை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமி ஒத்து வர மறுக்கிறார். தற்போது ஆர்.பி.உதயகுமார் தொடங்கி விட்டார். நான் அண்ணன் ஓபிஎஸ்-ஐ விட்டு தூரமாக இருந்தாலும் உதயகுமார் சொல்வது சரியில்லை. ஓபிஎஸ் மிக நல்லவர். ஆனால், வல்லவர் இல்லாததால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. ஓபிஎஸ் மீது அம்மா கோபமாக இருந்தார் என்ற பொய் குற்றச்சாட்டை அவர் கூறுகிறார். ஒரு நாளும் அம்மா அவரை அமைச்சரவையில் இருந்து விலக்கி பார்த்ததே இல்லை. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓபிஎஸ்-ஐ கொசு என்கிறார். அந்த கொசு மிக ஆபத்தானது. மலேரியா, டெங்கு போன்றவை கொசுவிலிருந்து தான் வருகிறது. நாங்கள் இல்லாத தைரியத்தில் பேசுகிறார். ஓபிஎஸ் என்ற கொசு கடித்தால் அவரால் தாங்க முடியாது.

எம்ஜிஆர், அம்மா புகைப்படமின்றி நடந்த அவிநாசி திட்டத்தின் விழாவில் உதயகுமாரும் பங்கேற்று இருக்கிறார். இது போன்றவர்களே கட்சியை இணையவிடாத வேலையை செய்கின்றனர். இது நீடித்தால் 2026 தேர்தலில் 26 சீட் கூட தேறாது. ஆர்.பி.உதயகுமாருக்கும் சேர்ந்து டெபாசிட் போகும்.

செங்கோட்டையன் அடுத்த ஓபிஎஸ். தங்கமானவர், தகராருக்கு வராதவர். பொதுச் செயலாளரை காட்டிலும் உயர்ந்தவர். அம்மாவுக்கு பின், ஓபிஎஸ்-க்கு முதல்வர் பதவி குத்தகை கொடுக்கப்பட்டதா என கேள்வி எழுப்பும் உதயகுமார், குத்தகை விலையை கொடுத்து எடுக்கலாமே. எடப்பாடிக்கு தமிழ் வார்த்தைகளே வராது. அவரை புரட்சித் தமிழன் என்கின்றனர். இரட்டை இலை வழக்கில் எடப்பாடி பயந்துள்ளார். ஓபிஎஸ், சின்னம்மா தமிழ்மொழியைப் பற்றி பேச வேண்டும். மாநில அரசை மட்டும் பேசிவிட்டு மத்திய அரசை தவிர்ப்பது கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

x