மதுரை: மதுரையில் இன்று தனியார் ஹோட்டலில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான ‘உரிமைகள்’ விளக்க கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ஒரு சாப்பாடு ரூ.800 என்பதால் ஒரு சங்கத்துக்கு 2 மாற்றுத் திறனாளிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால் மற்றவர்கள் ஹோட்டல் வாசலில் காத்திருந்தனர். மேலும், உடன் வந்தவர்களுக்கு உணவு கிடைக்காததால் ஒட்டுமொத்தமாக சாப்பிடாமல் புறக்கணித்து பட்டினியுடன் சென்றனர்.
மதுரை சொக்கிகுளத்தில் ஜெசி ரெசிடென்சியில் இன்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான திட்ட விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் சாமிநாதன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராகவேந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாற்றுத் திறனாளிகள் 6 பேருக்கு ஸ்கூட்டர், 6 பேருக்கு செயற்கைக்கால்கள் வழங்கினார்.
இதில் மாநில மாற்றுத் திறனாளிகள் நல ஆணையத்தின் உதவி தனி அலுவலர் மைதிலி, மாநில திட்ட மேலாளர்கள் ராஜராஜன், சங்கர் சகாயராஜ் ஆகியோர் திட்டம் குறித்து விளக்கமளித்தனர். விளக்கமளித்து பேசும்போது, உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.1700 கோடி மதிப்பில் தமிழக அரசுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்காக மாவட்டம் தோறும் ஒருங்கிணைந்த சேவை மையம் ஏற்படுத்தப்படவுள்ளது.
அது தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒரு வட்டாரத்திற்கு 350 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதில் தகுதி இருந்தால் மாற்றுத்திறனாளிகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என சென்னையிலிருந்து வந்திருந்த திட்ட மேலாளர்கள் ராஜராஜன், சங்கர் சகாயராஜ் ஆகியோர் பேசினர். இதற்கு மாற்றுத் திறனாளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது மாற்றுத் திறனாளிகளை மேம்படுத்துவதற்கான கூட்டமாகத் தெரியவில்லை. தொண்டு நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான கூட்டமாகத் தெரிகிறது.
உலக வங்கி நிதியுதவியான ரூ.1,700 கோடியை வீணாக்காமல் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். இதில் முழுக்க முழுக்க மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள் இதுவரை மாற்றுத்திறனாளிகள் பெயரைச் சொல்லி பல நிதியுதவிகளை பெற்று வருகின்றனர். ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு எதுவும் செய்வதில்லை.
இதனால் மாற்றுத் திறனாளிகள் எந்த பயனும் அடையவில்லை. இதனால் கண்துடைப்பாக நடக்கும் கூட்டத்தை புறக்கணிக்கிறோம். இதில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தையும் ஈடுபடுத்தி திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என கூட்டத்திலிருந்து எழுந்து வெளியே செல்ல முயன்றனர். இவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் பங்கேற்க ஒரு சங்கத்துக்கு 2 மாற்றுத் திறனாளிகள் மட்டுமே அனுமதி என்பதால் ஹோட்டலில் வெளியே பலர் காத்திருந்தனர்.
மேலும் ஒரு சாப்பாடு ரூ.800 என்பதால் குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றனர். இதனால் வெளிய காத்திருந்த மற்ற மாற்றுத்திறனாளிகள் உணவு கிடைக்கவில்லை. இதனால் கூட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் ஒட்டுமொத்தமாக சாப்பிடாமல் புறக்கணித்து பட்டினியோடு மதியம் 2.30 மணியளவில் ஹோட்டலிலிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்த குமார் கூறுகையில், மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்காக நடக்கும் கூட்டமாகத் தெரியவில்லை. தொண்டு நிறுவனங்களின் மேம்பாட்டுக்கான கூட்டமாக நடக்கிறது. மாற்றுத் திறனாளிகள் சங்கத்திற்கு 2 பேர் மட்டுமே அனுமதி. ஆனால் 37 தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
ஒரு சாப்பாடு ரூ.800 என்பதால் எங்களுடன் வந்தவர்களுக்கு உணவு இல்லை என்றனர். இதனால் நாங்களும் சாப்பிடாமல் பட்டினியோடு செல்கிறோம். மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் விளக்க கூட்டம் என்ற பெயரில் கூட்டம் நடத்திவிட்டு சாப்பிடும் உரிமையைக்கூட வழங்கவில்லை. இவ்வளவு தொகை செலவழித்து தனியார் ஏசி அரங்கத்தில் கூட்டம் நடத்துவதற்குப் பதிலாக வழக்கம்போல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மாற்றுத் திறனாளிகள் அனைவரையும் வரவழைத்து கூட்டம் நடத்தியிருக்கலாம். அங்கு நடத்தியிருந்தால் ரூ.100 செலவில் அனைவருக்கும் உணவு கிடைத்திருக்கும் என்றார்.
இது குறித்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் சாமிநாதன் கூறுகையில், அனைவருக்கும் சாப்பாடு உள்ளது. அவர்கள் சாப்பிடாமல் சென்றது பற்றி தெரியாது என்றார்.