மதுரை வண்டியூர் கண்மாய்: நவீன தொழில்நுட்பத்தில் ‘மிதவை நடைபாதை’யுடன் கூடிய படகு குழாம்


படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: ரூ.50 கோடியில் சுற்றுலாத்தலமாக்கப்படும் வண்டியூர் கண்மாயில் கொடைக்கானல், கோவையை போல் முதல் முறையாக நவீன தொழில் நுட்பத்தில் ‘மிதவை நடைபாதை’யுடன் கூடிய படகு குழாம் நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

ஆன்மீகம் மற்றும் பாரம்பரிய சுற்றுலா தலமான மதுரையில் வண்டியூர் கண்மாய், நகரின் முக்கிய எழில் மிகுந்த நீர்நிலை. இந்த நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டால், வடமதுரையின் ஒட்டுமொத்த தண்ணீர் பற்றாக்குறையும் தீரும். இந்த கண்மாயை நீர் ஆதாரத்திற்கு மட்டுமில்லாது சுற்றுலாப்பயணிகள் முதல் உள்ளூர் மக்களுக்கான சிறந்த பொழுதுப்போக்கு இடமாக மாற்ற, மாநகராட்சி நிர்வாகம் ரூ.50 கோடியில் சுற்றுலா தலமாக்கும் பணிகள் தொடங்கி நடக்கிறது.

கடந்த காலத்தில் இந்த கண்மாய், சுமார் 1,000 ஏக்கருக்கு மேல் பரந்து விரிந்து இருந்தது. தற்போது ஆக்கிரமிப்புகளால் 550 ஏக்கர் பரப்பளவுக்கு குறைந்து போய் விட்டது. மீதமுள்ள இந்த ஏரியையும், அதன் அழகையும் பராமரிக்கவே இந்த கண்மாயில் படகுசவாரி, சைக்கிளிங் பாதை அமைத்தல், நடைபயிற்சி பாதை, யோகா மையம், தியான மையம், சிற்றுண்டி, சிறிய நூலகம், குழந்தைகள் மற்றும் முதியோர் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீருற்று, ஸ்கேட்டிங் தளம், கராத்தே பயிற்சி மையம், இறகு பந்து மைதானம், பூங்கா போன்றவை அமைகிறது.

தற்போது மக்கள், கரையில் இருந்து கண்மாயின் மையப்பகுதிக்கு தண்ணீரில் நடந்துசென்று மகிழுவதற்கு, புதிய தொழில் நுட்பமான 'பிளோட்டிங் செட்டி' அமைப்பில் படகு குழாமிற்கு செல்லும் நடைபாதை மிதவையில் அமைக்கும் பணி நடக்கிறது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும், பாதுகாப்புக்காகவும் இதை மாநகராட்சி முன்னெடுத்துள்ளதாக தெரிகிறது.

மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மதுரையில் முதல் முறையாக சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க மிதவை நடைபாதையுடன் கூடிய படகுகுழாம் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே, கொடைக்கானல், கோவையில் உள்ள படகு குழாம் , இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் படகு குழாம் செல்வதற்கு சிமெண்ட் கட்டுமானத்தில் கண்மாயில் உள்ளேயே இதுபோல் நடைபாதை அமைப்பது என முடிவெடுக்கப்பட்டது.

அதனால், நீர் பிடிப்பு பகுதி குறையும் என்பதற்காக இந்த மிதவை நடைபாதை அமைக்கப்படுகிறது. நவீன தரத்துடன் இந்த படகு குழாம் கட்டமைக்கும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக புதிய தொழில் நுட்பமான 'பிளோட்டிங் செட்டி' அமைப்பில் படகு குழாமிற்கு செல்லும் நடைபாதை மிதவை அமைக்கப்படுகிறது. இந்த பணி முடிந்ததும் படகுகுழாம் அமைக்கப்படும். சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும், பாதுகாப்புக்காகவும் மாநகராட்சி முன்னெடுத்துள்ளது. இவை காற்று மூலம் நிரப்பப்பட்டுள்ள பைபர் குடுவைகளானவை.

ஈர்ப்பு சக்தியுடன் பாதுகாப்பாக இருக்கும். சுற்றுச்சூழல் பாதிப்பின்றி கட்டுமானம் இல்லாமல் படகு குழாம் செயல்பட இது உதவும். கண்மாயில் நிறைந்துள்ள ஆகாய தாமரைச்செடிகள் அகற்றும் பணியும் விரைவில் நடக்க உள்ளது. இப்பணிகள் நிறைவு பெற்றதும் படகு குழாய் சுற்றுலாத்துறை வசம் ஒப்படைக்கப்படும். அவர்கள் படகு விட்டு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவார்கள்’’ என்றார். மிதவை நடை பாதை, படகுசவாரி என வண்டியூர் கண்மாயில் இந்த திட்டம் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்க வாய்ப்புள்ளது.

x