சிவகங்கை அரசு மருத்துவமனையில் காலையில் ‘சர்வர்’ பிரச்சினையாலும், பிற்பகலில் பிஎஸ்என்எல் இணைப்புத் துண்டிக்கப்பட்டதாலும் நோயாளிகள் சிரமமடைந்தனர்.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் தங்களது பெயர், வயது, முகவரி, நோய் தன்மை குறித்து ‘ஆன்லைனில்’ பதிவு செய்து சீட் பெற்ற பின்னரே மருத்துவரைச் சந்திக்க முடியும். மருத்துவரும் நோயாளிகளைப் பரிசோதித்துவிட்டு, நோய் தன்மை, மருந்துகள் விவரங்களை ‘ஆன்லைனில்’ பதிவு செய்துவிட்டு, மருந்து, மாத்திரைகள், ஊசி விவரங்கள் அடங்கிய சீட்டை நோயாளிகளிடம் கொடுப்பார். அதன் பின்னரே ஊசி செலுத்தவும், மருந்து, மாத்திரைகள் வாங்கவும் முடியும்.
மேலும் ‘ஆன்லைனில்’ பதிவு செய்வதால் நோயாளிகள் எண்ணிக்கை, நோய் அதிகரிப்பு போன்ற விவரங்களை அறிந்து சுகாதாரத் துறை அதற்குரிய மருந்து, மாத்திரைகளை ஒதுக்கீடு செய்கிறது. மருத்துவம் தொடர்பான முடிவுகளையும் எடுக்கிறது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் 1,200-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று காலை ‘சர்வர்’ பிரச்சினையால் புறநோயாளிகள் தங்களது விவரத்தைப் பதிவு செய்து சிட்டைகளைப் பெற முடியவில்லை.
இதையடுத்து சிட்டைகளை ஊழியர்கள் கையில் எழுதிக் கொடுத்தனர். இதனால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஒரு மணி நேரத்துக்கு பின்னரே ‘சர்வர்’ சரியானது. பிற்பகலில் பிஎஸ்என்எல் இணைப்பு துண்டிக்கப் பட்டதால் மீண்டும் இணையம் முடங்கியது. இதனால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் பிற்பகலில் வந்த நோயாளிகள் தங்களது விவரங்களை ‘ஆன்லைனில்’ பதிவு செய்யாமல் சிட்டைகளைப் பெற்று சிகிச்சை பெற்றனர்.
இது குறித்து மருத்துவமனையில் கேட்டபோது, ”தமிழகம் முழுவதும் காலையில் ‘சர்வர்’ பிரச்சினை இருந்தது. பிற்பகலில் பிஎஸ்என்எல் இணைப்பில் பிரச்சினை ஏற்பட்டது” என்றனர்.