ராஜபாளையம் மலையடிவாரத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்: விவசாயிகள் கவலை


விருதுநகர்: ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் இரவில் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் மா, தென்னை, வாழை, நெல் ஆகியவை ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு மேலாக ராஜபாளையம் மலையடிவாரப் பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் இரவு நேரங்களில் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். கடந்த ஒரு வாரமாக 6 யானைகள் கொண்ட காட்டு யானைகள் கூட்டம் நச்சாடைப்பேரி கண்மாய் பகுதியில் உள்ள நெல் பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், உணவு மற்றும் நீருக்காக வனப்பகுதியை விட்டு வெளியே வரும் யானைகள் மலையடிவாரத்தை ஒட்டிய பகுதிகளில் உள்ள தென்னை, மா மரங்களை சேதப்படுத்தும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மலையடிவாரத்தில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள நச்சாடைப்பேரி கண்மாய், கல்லணை ஓடை பகுதி வரை வந்து நெல் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. 3 மாதங்களுக்கு மேலாக யானைகள் இதே பகுதியில் முகாமிட்டுள்ளதால் இரவு நேரங்களில் காவலுக்குச் செல்ல அச்சமாக உள்ளது. யானைகளை காட்டுக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

இதுகுறித்து ராஜபாளையம் வனச்சரகர் கார்த்திகேயன் கூறுகையில், யானை உள்ளிட்ட விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவதை தடுக்க மலையடிவாரப் பகுதிகளில் அகழிகள் அமைக்கப்பட்டுள்ளன. முத்துசாமிபுரம் மலையடிவார பகுதி வழியாக யானைகள் வெளியே வருகிறது. அப்பகுதியில் அகழிகள் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக, இந்த காலத்தில் யானைகள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று விடும். வன விலங்குகளை காட்டினுள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

x