திருவண்ணாமலை: செய்யாறில் அங்கன்வாடி மைய கட்டிடத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் ஒரு சிறுமிக்கு லேசான காயம் ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டிஎஸ்பி தெருவில் நகர்ப்புற அங்கன்வாடி மைய கட்டிடம் இயங்கி வருகிறது. இங்கு 30 மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் நேற்று 18 மாணவ, மாணவிகள் வருகை தந்துள்ளனர். இதில், 15 மாணவ, மாணவிகள் நேற்று மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த கட்டிடத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில், சிறுமி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்ற மாணவர்கள் காயம் ஏதுவுமின்றி தப்பியுள்ளனர். திடீரென மேற்கூரை பூச்சு விழுந்ததைப் பார்த்து மாணவ, மாணவிகள் அச்சத்தில் அழுதுள்ளனர். இந்த தகவலை அடுத்துப் பெற்றோர் உடனடியாக அங்கன்வாடி மையத்துக்கு வந்து தங்கள் குழந்தைகளைப் பதற்றத்துடன் அழைத்துச் சென்றனர்.
இந்த கட்டிடம் கடந்த 2015-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள நிலையில் வேறு எந்த சீரமைப்பு பணிகளும் நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில், அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சு விழுந்த தகவலை அடுத்து செய்யாறு சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி, அங்கு நேரில் ஆய்வு செய்ததுடன் அங்கிருந்த மாணவர்கள், பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், அந்த கட்டிடத்தை விரைந்து சீரமைக்கவும் அவர் உத்தரவிட்டார்.