தாமிரபரணியில் பெருமளவில் கலக்கும் கழிவுநீர்: அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்


படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி: தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலக்கும் பிரச்சினையை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சமீபத்தில் நேரில் ஆய்வு செய்திருந்த நிலையில், தற்போது மீண்டும் பெருமளவுக்கு கழிவுநீர் ஆற்றில் கலப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தாமிரபரணி கால்வாய்களின் கரையில் உள்ள பேரூராட்சிகளான விக்கிரமசிங்கபுரம், பாபநாசம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, ஏரல், ஆத்தூர் என, வழிநெடுக உள்ள பெருநகரங்களில் கழிவானது கால்வாய் அல்லது ஆற்றில் கலந்து மாசுப்படுத்துகிறது.

திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை உட்பட பல்வேறு திட்டங்களை தீட்டியும் தாமிரபரணி ஆற்றுக்குள் பாய்ந்தோடும் சாக்கடையை கட்டுப்படுத்த இயலவில்லை. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கடந்த 2018-ம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். தாமிரபரணியில் சாக்கடை கலக்க கூடாது, கரையோரம் உள்ள மண்டபங்கள் மற்றும் படித்துறைகளை சீரமைத்து பராமரிக்க வேண்டும் என்பது தான் வழக்கின் சாராம்சம்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வந்தது. சாக்கடையை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், படித்துறை மற்றும் மண்டபங்களை இந்து அறநிலையத்துறையினர் சீரமைக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், இந்த தீர்ப்பு வந்து பல மாதங்கள் கடந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, தாமிரபரணியில் கழிவுநீர் கலக்கும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் கேள்விகளை எழுப்பினர்.

திருநெல்வேலியில் தாமிரபரணியில் சாக்கடை கலப்பதை இவ்வாண்டு செப்டம்பருக்குள் நிறுத்திவிடுவதாக மாநகராட்சி ஆணையர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி உறுதி அளித்திருந்தார். அதில் திருப்தி அடையாத நீதிபதிகள் தாமிரபரணி ஆற்றில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இது தமிழகம் முழுவதும் கவனத்தை பெற்றிருந்தது. நீதிபதிகள் ஆய்வுக்கு வரும் முன்னர் திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக களமிறங்கி கண்துடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. இம்மாத தொடக்கத்தில் திருநெல்வேலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தாமிரபரணியை அழகுபடுத்தும் பணிகளை ஆய்வு செய்தார்.

இந்நிலையில், திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறையில் தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள தொட்டிகளில் சேகரமாகும் கழிவுநீர் நிரம்பி நேரடியாக ஆற்றில் கலப்பது பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படாமல் சேதமடைந்துள்ளன. இதனால் கழிவுநீர் எளிதாக வெளியேறி ஆற்றுக்குள் கலக்கிறது. மேலும் அதிகப்படியான கழிவுநீர் இங்கு வந்து சேர்வதால் தொட்டி நிரம்பி வழிகிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இங்கு குளிக்க செல்வோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், தமிழக முதல்வர் ஆய்வுக்கு பின்னரும் தாமிரபரணியில் பெருமளவுக்கு கழிவுநீர் கலப்பதை தடுக்க முடியாதது குறித்து இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனிடையே இந்த விவகாரம் குறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மார்ச் 4-ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது இதுகுறித்து முறையிட உள்ளதாக முத்தாலங்குறிச்சி காமராசு தெரிவித்தார்.

x