வயலூர் முருகன் கோயில் குடமுழுக்கு: அரசு அர்ச்சகர்கள், தமிழ் மந்திரம் புறக்கணிப்பா? - வெடித்தது சர்ச்சை


திருச்சி: வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் முழுவதும் தமிழில் நடைபெறவில்லை. அரசு அர்ச்சகர்களை வைத்து புகைப்படம் மட்டுமே எடுக்கப்பட்டது என்று தமிழ் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி குமார வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதுகுறித்து, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் தனது 'எக்ஸ்' தள பக்கத்தில், "திருச்சி வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற திருக் குடமுழுக்குப் பெருவிழாவில், "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் பணி நியமனம் பெற்ற அர்ச்சகர்கள் ஜெயபால், பிரபு ஆகியோர் யாகசாலை பூஜை மற்றும் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்திய நிகழ்வுகளில் பங்கேற்றது, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் இமாலய வெற்றியாகும். திராவிட மாடல் அரசின் இந்த சாதனைகளால் மனம் மகிழ்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சேலம் மேச்சேரி சத்தியபாமா அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சிம்மம் சத்திய பாமா `இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியது: அனைவரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின்படி, தமிழக முதல்வரால் வயலூர் முருகன் கோயிலில் நியமிக்கப்பட்ட அரசு அர்ச்சகர்கள் பிரபு, ஜெயபால் ஆகியோரை, யாகசாலை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தவில்லை. ஒப்புக்கு அங்கு அமர வைக்கப்பட்டார்கள். அதை புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதேபோல, ராஜகோபுரத்திலோ, முருகன், சிவன், அம்மன் மூலஸ்தான கோபுரத்திலோ அவர்கள் ஏறுவதற்கு அனுமதிக்கப் படவில்லை. கும்பாபிஷேகம் முழுக்க முழுக்க சம்ஸ்கிருத மந்திரத்தில்தான் நடைபெற்றது. தமிழையும், தமிழர்களையும் இந்து சமய அறநிலையத் துறை அவமதித்துள்ளது. இதை அமைச்சர் சேகர்பாபு மூடி மறைக்கிறார் என தெரிவித்தார்.

துண்டுப் பிரசுரம் விநியோகம்

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவரான பெ.மணியரசன் தலைமையில் செயல்படும் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில், வயலூர் முருகன் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அதில், தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட. வழக்கில் நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில், "கருவறை அர்ச்சனை, வேள்விச்சாலை, கோபுரக் கலசம் ஆகியவற்றில் தமிழில் மந்திரங்கள் சொல்ல வேண்டும். அப்படி இல்லாவிட்டால் சம்ஸ்கிருதத்துக்கு இணையாக சரிபாதி அளவில் தமிழில் மந்திரங்களை சொல்ல வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

அதன்படி, தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடைபெற்றது. ஆனால், அதன்பிறகு வடபழனி முருகன் கோயில், பழனி ஆண்டவர் கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற குடமுழுக்குகளில் தொடர்ந்து தமிழ் புறக்கணிக்கப்பட்டது. சம்ஸ்கிருதத்தில் மட்டுமே குடமுழுக்கு நடைபெறுகிறது. வயலூர் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று இணை ஆணையர், கோயில் செயல் அலுவலரிடம் மனு கொடுத்தோம். ஆனாலும், சம்ஸ்கிருதத்தில்தான் குடமுழுக்கு நடத்தி இருக்கிறார்கள். தமிழ்க் கடவுளான முருகன் கோயிலிலேயே தமிழை புறக்கணிப்பது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி 'இந்து தமிழ் திசை'யிடம் கூறியது: அரசு அர்ச்சகர்கள் இருவரில் ஒருவர் வயலூர் கோயிலில் பிரசித்திபெற்ற பொல்லாப் பிள்ளையார் சந்நிதியிலும், மற்றொருவர் நவக்கிரக சந்நிதியிலும் வேலை செய்கிறார்கள். இவர்கள் இருவரும் பொல்லாப் பிள்ளையார் விமானத்துக்கு (மூலஸ்தான கோபுரம்) கும்பாபிஷேகம் செய்தனர். யாகசாலையிலும் அமர வைக்கப்பட்டனர்.

இந்த கும்பாபிஷேகத்தில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஓதுவார்கள் 30 பேரை கொண்டு, பன்னிரு திருமுறை, திருப்புகழ் உள்ளிட்ட அனைத்து தமிழ் மந்திரங்களும், 50 சதவீதத்துக்கும் மேலாகவே பயன்படுத்தப்பட்டு உள்ளது. சிலர் 'நாங்கள் முழுக்க முழுக்க தமிழில் கும்பாபிஷேகம் செய்கிறோம். அதற்குரிய தொகையை எங்களிடம் கொடுங்கள்' என்கின்றனர். அதை எப்படி அனுமதிக்க முடியும்? என தெரிவித்தார்.

x