சேலம்: ஆத்தூரை அடுத்த காட்டுக்கோட்டையில், வசிஷ்ட நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் உள்ள நீரில் ஆயிரக்கணக்கில் மீன்கள் உயிரிழந்து மிதந்தன. இதன் காரணமாக, அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது.
இது குறித்து, ஐக்கிய விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சரவணன் உள்பட விவசாயிகள் கூறியதாவது: வசிஷ்ட நதி தடுப்பணையில் தேங்கியுள்ள நீரில் திடீரென மீன்கள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து மிதக்கின்றன. சேகோ தொழிற்சாலைகள் உள்பட பல தொழிற்சாலைகளின் ரசாயனம் கலந்த கழிவு நீர், வசிஷ்ட நதியில் கலக்கவிடப் படுகிறது. இது நிலத்தடி நீரிலும் பரவி, நீரின் நிறம் மாறிவிட்டது. தற்போது வசிஷ்ட நதியில் மீன்கள் உயிரிழந்து மிதக்கின்றன. வசிஷ்ட நதியின் இதே நீரைத் தான் பாசனத்துக்கும், கால்நடைகளுக்கும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் கால்நடைகளுக்கும் பல்வேறு வியாதிகள் வர வாய்ப்புள்ளது. இந்த நீரை எடுத்து விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் உள்ள பொதுமக்கள் திறந்தவெளி கிணறுகளையும் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதிகளவில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களும் அருகில் செல்ல இயலவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, தடுப்பணை நீரை பாதுகாக்க வேண்டும். மேலும், தொழிற்சாலைகளின் கழிவு நீரை வசிஷ்ட நதியில் கலக்கவிடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.