இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 10 பேர் கைது


ராமேசுவரம்: மன்னார், நெடுந்தீவு கடற்பகுதியில் 10 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், 3 விசைப்படகுகளையும் சிறைப்பிடித்தனர்.

ராமேசுவரத்திலிருந்து கடலுக்குச் சென்ற முனியேந்திரன் என்பவரின் விசைப்படகை இலங்கை கடற்படையினர் மன்னார் கடற்பகுதியில் புதன்கிழமை இரவு சிறைப்பிடித்து படகுகளிலிருந்த ஜோதிராஜன், ராமு, அருள்ஜார், ஜான் கென்னடி ஆகிய 4 மீனவர்களை கைது செய்தனர்.

மேலும் ராமேசுவரத்திலிருந்து கடலுக்கு சென்ற சூசை வியாகுலம், ஆல்ட்ரின் ஆகிய இருவருக்குச் சொந்தமான 02 விசைப்படகுகளை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை அதிகாலை சிறைப்பிடித்த்தனர். இந்த படகுகளிலிருந்த ஜான் முத்துக்குமார், லவ்சன், பவுல்ராஜ், அந்தோணி செல்வம், ஜான்போஸ்கோ, ஜான்ராஜ் ஆகிய 06 மீனவர்களை கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து 13 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டு 99 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக முதல்வர் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

x