சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது போலீஸார் நடத்திய தடியடி சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் 16-வது ஆண்டாக வழக்கறிஞர்கள் அந்த நாளை கருப்பு தினமாக அனுசரித்தனர். சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற வழக்கறிஞர்களை உயர் நீதிமன்ற நுழைவு வாயில் பகுதியில் போலீஸார் கைது செய்தனர்.
கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின்போது தமிழர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உயர் நீதிமன்றம் வந்த பாஜக மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி மீது அழுகிய முட்டை வீசப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் கடந்த 2009 பிப்.19 அன்று சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களை கைது செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக போலீஸார் உயர் நீதிமன்ற வளாகத்தில் தடியடி நடத்தினர். இதில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றத்துக்கு வருகை தந்த பொதுமக்கள் என பலரும் படுகாயமடைந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சிபிஐ ஒரு சில போலீஸார் மீதும், 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மீதும் குற்றஞ்சாட்டி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. தடியடி சம்பவத்துக்கு காரணமான போலீஸ் உயரதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும்
பிப்.19-ம் தேதியை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். அதன்படி 16-வது ஆண்டு கருப்பு தினமான நேற்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான வழக்கறிஞர்கள் ஆவின் நுழைவு வாயில் பகுதியில் திரண்டு சிபிஐ அதிகாரிகளைக் கண்டித்து கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பி்ன்னர் சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாகச் செல்ல முற்பட்டனர். அதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை உயர் நீதிமன்றத்தின் வெளியே கைது செய்த போலீஸார், ராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்று தங்கவைத்து மாலையில் விடுவித்தனர்.
வழக்கறிஞர்களின் இந்த போராட்டம் காரணமாக என்எஸ்சி போஸ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் எழும்பூர் நீதிமன்ற வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் துரை கண்ணன்,
துணைத் தலைவர் பாபு, செயலாளர் பாரதி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் திரண்டு கோஷமெழுப்பினர்.