பெண் பயணிகள் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக ரயில்வே டிஜிபியுடன், சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இதில், ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் மருத்துவ பரிசோதனைக்காக தனது தாயார் வீடான சித்தூர் மாவட்டத்துக்கு செல்வதற்காக கோவையில் இருந்து காட்பாடி வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பொது வகுப்பு பெட்டியில் அண்மையில் பயணித்தார். ரயில் வேலூர் மாவட்டம், காவனூர் - விரிஞ்சிபுரம் இடையே சென்று கொண்டிருந்தபோது, பெண்கள் பெட்டியில் தனியாக பயணித்த கர்பிணியிடம் அதே பெட்டியில் இருந்த இளைஞர் ஒருவர் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றார். பெண் மறுத்ததால், அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டார். இதில், நல்வாய்ப்பாக கர்ப்பிணி உயிர் தப்பினார். ஆனால், அவரது வயிற்றில் இருந்த சிசு கலைந்தது.
இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில், சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், இரவு பணி முடிந்து வீடு திரும்பிய பெண் காவலரிடம் நகைப் பறிப்பு முயற்சி மற்றும் பாலியல் அத்துமீறலும் நடைபெற்றது. இதுபோன்ற நிகழ்வுகளால் ரயில்களும், ரயில் நிலையங்களும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுஒருபுறம் இருக்க, ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தொடர்பாகவும், பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும் சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால், ரயில்வே டிஜிபி வன்னிய பெருமாளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் ரயில்வே ஐஜி ஏ.ஜி.பாபு, எஸ்பி ஈஸ்வரன், ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி ஈஸ்வரராவ் உள்ளிட்ட ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அப்போது, ரயில் நிலையங்கள், ரயில்களில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக விரிவான ஆலோசனைகளை டிஜிபி சங்கர் ஜிவால் வழங்கினார். அதோடு மட்டும் அல்லாமல் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ரயில்வே காவல் துறையில் போதுமான எண்ணிக்கையில் காவலர்கள் இருக்கிறார்களா, கடந்த ஆண்டைவிட குற்றங்கள் குறைந்துள்ளனவா என்ற புள்ளி விபரங்களும் பகிரப்பட்டன.
இதையடுத்து, ரயில்களில் செயின் பறிப்பில் ஈடுபடுபவர்கள், பயணிகளின் உடைமைகளை திருடுபவர்கள் சிறையில் இருந்து வெளிவந்தபின் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். கவனக்குறைவாக தண்டவாளங்களை கடக்கும்போது அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் அவசர உதவிக்கு ரயில்வே போலீஸ் உதவி எண் 1512-ஐ தொடர்பு கொள்ள தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் பாதுகாப்பு, உடைமைகள் பாதுகாப்பு தொடர்பாக பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அறிவுத்தல்கள் வழங்கப்பட்டன. ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் மது போதையில் இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆலோசனையின்போது ரயில்வே காவல்துறையில் அதிகளவில் காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்த பணியிடங்களை நிரப்பி கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை முடுக்கிவிட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது