திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருப்பரங்குன்றம் மலையைக் காக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் பிப். 4-ம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மதுரையில் 144 தடையாணை பிறப்பித்து ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணியைச் சேர்ந்த சுந்தரவடிவேல், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.
இதேபோல், திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் செல்லும் வாகனங்களை தடுக்கும் வகையில் போலீஸார் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி முருகன் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரிக்கப்பட்டு, உயர் நீதிமன்ற அனுமதியின் பேரில் பழங்காநத்தத்தில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
எனினும், நிலுவையில் இருந்த 2 மனுக்களும் நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் தரப்பில், "திருப்பரங்குன்றம் மலையை இரு தரப்பினரும் உரிமை கோருவதால், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மலையைக் கொண்டு வரலாம்" என்று தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், "திருப்பரங்குன்றத்தில் மக்கள் யாரும் சண்டையிடவில்லை, ஆனால் நீங்கள் மக்களை சண்டைபோட வைத்துவிடுவீர்கள் போலிருக்கிறது" என்று தெரிவித்தனர். இடையீட்டு மனுதாரர்கள் தரப்பில், "கோயில் வழிபாட்டு உரிமை தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பிரதான மனுக்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. மனுதாரர்கள் உச்ச நீதிமன்றம்தான் செல்ல வேண்டும்" என்று கூறப்பட்டது.
அரசுத் தரப்பில், "மனுதாரர்கள் ஜன. 29-ல் போலீஸாரிடம் மனு அளித்துவிட்டு, அடுத்த 3 நாட்களில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.