சென்னை: உலக தாய்மொழி தினத்தை அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) முன்மொழிந்த பிப்ரவரி 21-ம் தேதி ஆண்டுதோறும் உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் உலகம் முழுவதும் அந்தந்த மொழிசார்ந்த கலாச்சார நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும். அதன்படி நாடு முழுவதுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பிப்ரவரி 21-ம் தேதி தாய்மொழி தினத்தை விமர்சையாக கொண்டாட வேண்டும்.
இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படும் சிறப்பை மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இதுதவிர பிற இந்திய மொழிகளை கற்றுக்கொள்ளவும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். மொழிசார்ந்த கலை நிகழ்ச்சிகள், குழு விவாதங்கள், பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி மற்றும் கண்காட்சி ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தலாம். மேலும், தாய்மொழி தினம் கொண்டாட்டம் தொடர்பான அறிக்கையை யுஜிசி இணையதளத்தில் (www.ugc.ac.in/uamp) பதிவேற்றம் செய்ய வேண்டும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.