மதுரை: கோடை காலம் தொடங்கிவிட்டநிலையில் மதுரை மாவட்டத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு 'அம்மை' நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு பொதுத்தேர்வு நெருங்கும்நிலையில், இந்த நோய் பரவல் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் குழந்தைகளுக்கு வெயில் கால நோய்கள் ஏற்படத்தொடங்கி உள்ளது. சமீப காலமாக அம்மை நோய் தாக்கம், பரவலாக குறைந்து இருந்தநிலையில் தற்போது ஆங்காங்கே இந்த நோய் தாக்கம் தெரிய வந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை, பள்ளிக் குழந்தைகள் அம்மை நோய் பாதிப்பது அதிகமாக பரவத்தொடங்கி உள்ளது. ஆனால், இந்த நோய் பாதிப்புக்கு பெற்றோர், கைவைத்தியம், சித்த வைத்தியம் போன்றவற்றை பார்ப்பதால் அரசு மருத்துவமனைகளில், ஆரம்ப சுகாதாரநிலையங்களில் பெரியளவிற்கு இந்த நோய் பாதிப்பு பதிவு ஆகாமல் உள்ளது. அதனால், மாவட்ட சுகாதாரத்துறை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ''மதுரையில் சமீப நாட்களில் பகல் பொழுதில் சாலையில் நடமாட முடியாத அளவிற்கு வெயில் அடிக்கிறது. மீறி வாகனங்களில் சென்று வந்தால் கூட உடல் வலி, சோர்வு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் வெயிலின் உஷ்ணத்தால், புழுக்கம் ஏற்பட்டு நிம்மதியாக தூக்கமில்லை. மேலும், நன்றாகவே குளித்தாலும், இரவு நேரங்களில் உடலில் அரிப்பு ஏற்பட்டு தொடர்ந்து சொறிந்தால் புண்கள், கொப்புளங்கள் உள்ளிட்ட சரும பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு தொண்டை வீக்கம், காய்ச்சல், உடல் வலி, சோர்வு ஏற்படுகிறது.
பின்னர் உடலில் நீர்க்கோத்த கொப்புளங்கள் உருவாகின்றன. இதனால், குழந்தைகளுக்கு அம்மை நோய் ஏற்படுகிறது. கிராமப் பகுதி மக்கள் இந்நோய் தாக்கம் உள்ள குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், வீட்டிலேயே வேப்பிலை, மஞ்சள் மூலம் மருத்துவம் பார்த்து வருகின்றனர். நகரப் பகுதி மக்கள் ஒரளவு விழிப்புணர்வுடன் இருப்பதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுரை அரசு மருத்துவமனை 'டீன்' அருள் சுந்தரேஷ்குமார் கூறுகையில், ''சின்னம்மை பாதிப்பு குழந்தைகள் சிகிச்சைக்கு வரவில்லை. ஆனால், தட்டமை பாதிப்பு குழந்தைகள் சிகிச்சை வந்து குணமடைந்து சென்றுள்ளனர்,'' என்றார்.
இந்திய குழந்தைகள் நல குழுமம் மதுரை கிளை தலைவர் டாக்டர் நந்தனி குப்புசாமி கூறுகையில், ''அம்மை நோய் ஒரு வித தொற்றுநோய்தான். இந்த நோய் பாதிப்புக்கு பெரும்பாலும் தண்ணீர் மிக முக்கிய காரணம். குழந்தைகளுக்கு, இந்த வெயில் காலத்தில் குடிக்கவும், குளிக்கவும் சுடு தண்ணீர் உபயோகப்படுத்த வேண்டும். வெயில் காலத்தில் இந்த நோய் பாதிப்பு வரும். அதை தடுக்க நாம் குழந்தைகளை சுகாதாரமாக பாதுகாக்க வேண்டும். வீடுகளில் தலையணை உறையை அன்றாடம் துவைத்து சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.
வாரத்திற்கு ஒரு முறை டெட்டால் போட்டு சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். பெரியவர்களுக்கும் இந்த நோய் வர வாய்ப்புள்ளது. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி பெரியவர்களுக்கு அதிகமாக இருப்பதால் இந்த நோய் பாதிப்பில் இருந்து தப்பித்து விடுகிறார்கள். ஆனால், குழந்தைகளுக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். பள்ளி முடிந்து வந்தவுடன் கை, கால் அலம்ப சொல்ல வேண்டும். பெற்றோர் குழந்தைகளை முறையாக பராமரித்தால் இந்த நோய் வரவே வராது. அவர்களுடைய கவனக்குறைவே, குழந்தைகளுக்கு வெயில் கால நோய்கள் ஏற்படுகிறது,'' என்றார்.