செங்கல்பட்டு: தமிழகத்திற்கு ரூ.2,150 கோடி சமக்ர சிக்ஷா நிதியை வழங்காத மத்திய அரசினை கண்டித்தும், மும்மொழிக் கொள்கையை கண்டித்தும் செங்கல்பட்டில் சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்திற்கு ரூ.2150 கோடி சமக்ர சிக்ஷா நிதியை வழங்காத மத்திய அரசின் முயற்சி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பெரும் பகுதியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு நிதி அளிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளதற்கு தமிழகத்தில் கண்டன குரல் ஏழத்தொடங்கியுள்ளது.
இதனிடையே மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் நிதி எனக் கூறுவதைக் கண்டித்தும், கல்விக்கான நிதியை மத்திய அரசு வழங்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் தமிழக மாணவர்களின் கல்விக்கான நிதியை வழங்க மறுக்கும் மோடி அரசைக் கண்டித்து இன்று செங்கல்பட்டு சட்டக் கல்லூரி முன்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக மாணவர்களின் கல்விக்கான நிதியைத் தர மறுக்கும் மோடி தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சரின் ஆணவப் பேச்சைக் கண்டித்தும் இந்தியை திணிக்காதே, மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.