தூத்துக்குடி: தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
தூத்துக்குடி கோட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தூத்துக்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. கோட்டாட்சியர் பிரபு தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஐகோர்ட் ராஜா முன்னிலை வகித்தார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசியதாவது:
தூத்துக்குடி அருகே உள்ள சிறுபாடு பகுதியில் வடிகால் அடைபட்டு இருப்பதால், அப்பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே, வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். சிறுபாடு குளத்தில் தேங்கியுள்ள குப்பையை அகற்றவும், குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாங்கரை பகுதியில் குளம் உடைப்பு ஏற்பட்டு வயல்களை தண்ணீர் அரித்து சென்றது. இதில் ஏற்பட்ட பள்ளத்தை நிரப்ப முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே, குளத்தில் இருந்து மண் எடுத்து வயலில் ஏற்பட்ட பள்ளத்தை நிரப்ப வேண்டும்.
மருதூர் மேலக்காலில் செய்துங்கநல்லூரில் உள்ள அழுதா ஓடை மூலம் சுமார் 200 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த ஓடை வருவாய் கணக்கில் இல்லை. இதனை கணக்கில் கொண்டு வர வேண்டும். அந்த ஓடையை தூர்வார வேண்டும். ராமானுஜம்புதூர் சாத்தனேரி குளத்துக்கு தனிக்கால்வாய் அமைத்து மணிமுத்தாறு தண்ணீரை கொண்டு வர வேண்டும். கருங்குளம் அருகே ராசங்குளத்தில் உள்ள முட்புதர்களுக்குள் பன்றிகள் தங்கியுள்ளன.
இந்த முட்புதர்களை அகற்றி பன்றிகளை பிடிக்க வேண்டும். ராசங்குளத்தில் 2 மலைப்பாம்புகள் இருப்பதாக தெரிகிறது. மேய்ச்சலுக்கு செல்லும் ஆட்டுக்குட்டிகளை அந்த மலைப்பாம்புகள் விழுங்கி விடுகின்றன. பாம்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர். இக்கூட்டத்தில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்
இதேபோன்று, திருச்செந்தூர் கோட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது. கோட்டாட்சியர் சுகுமாறன் தலைமை வகித்தார். திருச்செந்தூர், சாத்தான்குளம், ஏரல் வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் குறைகளைத் தெரிவித்தனர். இதற்கு கோட்டாட்சியர் பதிலளித்து பேசினார். வேளாண்மை, வேளாண் பொறியியல், பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.