ஈரோடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கொடுமுடி பேரூராட்சி தலைவர் மீது, வரும் 24-ம் தேதி, நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த திலகவதி சுப்பிரமணி பதவி வகித்து வருகிறார். பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 கவுன்சிலர்களில் தலைவர் நீங்கலாக, தி.மு.க. காங்கிரஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட 12 கவுன்சிலர்கள் தலைவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றக்கோரி ஆட்சியரிடம் ஏற்கெனவே மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நம்பிக்கை இல்லா தீர்மானம் நடத்த உத்தரவிட்டது. இதன்படி, வரும் 24-ம் தேதி மாலை 3 மணிக்கு, கொடுமுடி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த தீர்மானத்தின் பேரில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால் இந்த கூட்டத்தில், தலைவர், துணைத் தலைவர் உட்பட வார்டு கவுன்சிலர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என கொடுமுடி பேரூராட்சி செயல் அலுவலர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.