பொள்ளாச்சி பகுதியில் சுருள் வெள்ளை ஈ தாக்குதல்; 26 ஆயிரம் ஹெக்டரில் தென்னை மரங்கள் பாதிப்பு


படம்: எஸ்.கோபு

கோவை: பொள்ளாச்சி, ஆனைமலை, குடிமங்கலம் பகுதிகளில்ல் சுருள் வெள்ளை தாக்குதலால் பாதிக்கப்பட்ட தென்னந் தோப்புகளில் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் தோட்டக்கலைத்துறை இயக்குநர் தலைமையிலான குழுவினர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாவட்டத்தில் ஆனைமலை, பொள்ளாச்சி வட்டாரங்களில் சுமார் 50 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. தேங்காய் மற்றும் இளநீர் ரகங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளர். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல், தஞ்சாவூர் வேர் வாடல் உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதல் ஏற்பட்டு தென்னை மரங்கள் பட்டுப்போயின. இதனால் உற்பத்தி குறைந்து விவசாயிகளின வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், தோட்டக்கலை துறை இயக்குநர் குமரவேல் பாண்டியன் தலைமையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று ஆனைமலை வட்டாரத்தில் ஒடையகுளம், காளியாபுரம், பொள்ளாச்சி வட்டாரத்தில் போடிபாளையம், ஆவல் சின்னாம்பாளையம் கிராமங்களில் வெள்ளை ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்ட தோப்புகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.

விவசாயிகளிடம் நடந்த கலந்துரையாடலில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த தற்போது விவசாயிகள் கடைபிடித்துவரும் முறைகள் குறித்து கேட்டறிந்தனர். வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைத்துறையினர் உருவாக்கியுள்ள மஞ்சள் வண்ண அட்டை ஒட்டுபொறி, எதிர் உயிரி முறைகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தினர்.

பொள்ளாச்சி பகுதியில் 25 ஆயிரம் ஹெக்டரில் வெள்ளை ஈ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலமாக தென்னை மரங்களை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்களை அழிக்க, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைக்கான வழிமுறைகளைத் தொகுத்து தமிழக அரசிடம் கருத்துரு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல ஆண்டுகளாக நிலவும் இப்பிரச்சினைக்கு தமிழக அரசு மூலம் தீர்வு காணப்படும் என, இயக்குநர் குமரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

இதேபோல, உடுமலையை அடுத்த குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட வீதம்பட்டி கிராமத்தில் குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வெள்ளை ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். குடிமங்கலம் வட்டாரத்தில் சுமார் 14,000 ஹெக்டேர் பரப்பில் பிரதான பயிராக தென்னை நடவு செய்யப்பட்டுள்ளது. இதில், சுமார் 1000 ஹெக்டேர் பரப்பிலான தென்னை மரங்கள் நோய் தாக்குலுக்கு உள்ளாகி இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

ஆய்வின்போது, தோட்டக் கலை துணை இயக்குநர் சசிகலா, தோட்டக் கலை உதவி இயக்குநர்கள் செல்வகுமார், உமா சங்கரி, கலாமணி மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

x