பயணிக்கு மாரடைப்பு; விருதுநகரில் நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்!


விழுப்புரம்: முண்டியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெரோம் (30). தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு, நேற்று குடும்பத்துடன் வந்தேபாரத் ரயிலில் ஊருக்குப் புறப்பட்டார். ரயில் விருதுநகர் அருகே வந்தபோது ஜெரோமுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, விருதுநகர் ரயில் நிலைய 2-வது நடைமேடையில் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னர் பேட்டரி வாகனம் மூலம் முதல் நடைமேடைக்கு ஜெரோம் அழைத்துவரப்பட்டார். அப்போது, பயணச்சீட்டு எடுப்பதற்காக காத்திருந்த அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். அதன்பின், 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வந்தே பாரத் ரயிலுக்கு விருதுநகரில் நிறுத்தம் இல்லை. ஆனாலும், பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் சுமார் 20 நிமிடங்கள் ரயில் நிறுத்தப்பட்டு தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

x