சென்னை: ஊழியர்கள் மீது வாடிக்கையாளர்கள் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருவதால், அனைத்து வங்கிக் கிளைகளிலும் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்று வங்கி ஊழியர் சங்கம், மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு மற்றும் வங்கி நிர்வாகங்களின் கொள்கைகள் காரணமாக, வங்கிகளில் புதிய ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை. இதனால், வங்கிகளில் ஊழியர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் 2 லட்சம் ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
எனவே, வாடிக்கையாளர்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப சேவை வழங்க முடிவதில்லை. இதனால், கோபமடையும் அடையும் வாடிக்கையாளர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இத்தகைய தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அண்மையில் பிஹார் மாநிலம் நவாடாவில் உள்ள யூனியன் வங்கி மேலாளர் அபய் குமார் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது. தற்போது பல வங்கிக் கிளைகளில் பாதுகாவலர்கள் இல்லை. வங்கி நிர்வாகங்கள், வங்கிகளில் உள்ள பணம் மற்றும் நகைகளைப் பாதுகாத்தால் போதும் என்று கருதுகின்றன. ஆனால், ஊழியர்களை பாதுகாக்கத் தவறுகிறது. இதனால், அவர்கள் வாடிக்கையாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியும், மத்திய நிதித் துறையும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளன. நாடு முழுவதும் வேலையில்லாதவர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்நிலையில், வங்கிகளில் போதிய அளவு ஊழியர்களை நியமிப்பதில் என்ன பிரச்சினை உள்ளது? தற்போது வங்கிகளில் சேரும் படித்த இளைஞர்கள், தங்களது வாழ்வாதாரத்துக்கு வேண்டிதான் சேருகின்றனர். எனவே, வங்கிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களை பணியில் அமர்த்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.