தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 14-ம் தேதி 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த ஜன.6-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜன.8-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெற்றது. இறுதி நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலுரை வழங்கினார். அன்று, பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த பேரவைத்தலைவர் மு.அப்பாவு கூறியதாவது:
சட்டப்பேரவையின் அடுத்தக்கட்ட கூட்டம் மார்ச் 14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கூட்டப்படுகிறது. அன்று காலை 9.30 மணிக்கு 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்வார்.
அதைத் தொடர்ந்து 2025-26ம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மற்றும் 2024-25ம் ஆண்டின் கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகள் ஆகியவை வரும் மார்ச் 21-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படும்.
வேளாண் பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கை விவாதங்கள் தொடர்பாக, அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். மானிய கோரிக்கை விவாதங்களை மாலை நேரத்திலும் நடத்த வேண்டாம் என்றுதான் முடிவெடுத்துள்ளோம். அதுகுறித்தும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பேசப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பட்ஜெட் ஆலோசனை: சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகளிடம் இருந்து கருத்துகளை கேட்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட்டுக்கு தனித்தனியாக அமைச்சர்கள் தலைமையில் கருத்து கேட்கப்படுகிறது. இதில், பொது பட்ஜெட் தொடர்பாக, பொதுமக்கள், தொழில் நிறுவனங்களிடம் 3 நாள் கருத்து கேட்பு கூட்டம் நேற்று தொடங்கியது. தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியம், அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேற்று, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை சார்ந்தவர்கள் கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர். தொடர்ந்து, இன்று வணிகவரித்துறை, சமூக நலன், குழந்தைகள் நலத்துறை, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலன், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட உள்ளிட்ட துறைகளைச் சார்ந்தவர்களிடம் ஆலோசனை பெறுவதற்கான கூட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து நாளை, தொழில், குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வேளாண் பட்ஜெட் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, விரைவில் மாவட்டங்களுக்கு அமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விவசாயிகள், விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்களிடமும் கருத்துகள் கேட்க உள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.