ஒரு மருத்துவ கல்லூரியைகூட திமுக அரசு திறக்கவில்லை: பாமக தலைவர் அன்புமணி விமர்சனம்


ஆட்சிக்கு வந்து ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட திறக்காத ஒரே அரசு திமுக அரசுதான் என பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவோ, ஏற்கெனவே உள்ள மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்தவோ தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அனுமதித்த காலகட்டத்துக்குள் தமிழக அரசு விண்ணப்பிக்கவில்லை. 2025-26 முதல் புதிய விதிகளின்படி தமிழக அரசு விண்ணப்பித்திருந்தாலும் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கோ, கூடுதல் இடங்களுக்கோ அனுமதி கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

ஆனாலும், தமிழக அரசின் சார்பில் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு, மருத்துவ ஆணையத்தின் புதிய விதிகளைக் காட்டி அவை நிராகரிக்கப்பட்டிருந்தால், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று அதன் உதவியுடன் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறவும் வாய்ப்புகள் இருந்தன. ஆனால், புதிய கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்காததன் மூலம் மத்திய அரசின் விதியை எதிர்ப்பதற்கு கூட இடம் கொடுக்காமல் தமிழக அரசு சரணடைந்து விட்டது.

தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற கொள்கையின் அடிப்படையில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும். இதுகுறித்து திமுக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு 4 ஆண்டுகளாகியும் இதுவரை ஒரு மருத்துவ கல்லூரியைக்கூட தொடங்கவில்லை. கடந்த 35 ஆண்டுகளில் ஒரு அரசு மருத்துவ கல்லூரியைக்கூட திறக்காத ஒரே அரசு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுதான். இதனை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

x