நீர் நிலையில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்ட உயர் நீதிமன்றம் தடை


மதுரை: புதுக்கோட்டை அருகே ஊருணிக்குள் மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டுவதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரைச் சேர்ந்த சி.காசிராஜன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மாத்தூரில் சத்திரம் ஊருணி உள்ளது. இந்த ஊரணியில் ரூ.40 லட்சம் செலவில் மாத்தூர் ஊராட்சி சாரபில் மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டப்படுகிறது. நீர் நிலைகளில் எவ்வித கட்டிடங்களும் கட்டக் கூடாது என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சத்திரம் ஊருணியில் மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி கட்ட அனுமதி வழங்கியது சட்டவிரோதம். இதனால் சத்திரம் ஊருணியில் மேல் நிலை தொட்டி கட்ட தடை விதித்தும், மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் நோக்கத்தில் செயல்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும், கட்டுமானப் பணிக்கு செலவிட்ட பணத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வசூலிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.கணபதி சுப்பிரமணியம் வாதிடுகையில், நீர் நிலைகளில் எந்தக் கட்டிடங்களும் கட்டக்கூடாது என இந்த அமர்வு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி ஊருணிக்குள் மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருகிறது. ஊருணி கரையிலும் ஆக்கிரமிக்கப்புகள் உள்ளன என்றார்.

பின்னர் நீதிபதிகள், ஊருணிக்குள் மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி கட்ட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. நீர் நிலைகளில் கட்டிடம் கட்ட தடை விதித்து பிறப்பித்த உத்தரவு தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டது என்பது குறித்து அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை மார்ச் 6-க்கு தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

x