வேலூர்: விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் விவசாய மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சீதா, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சுமதி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) அப்துல்முனிர் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டனர்.
இதில், காட்பாடி அடுத்த பரமசாத்து கிராம மக்கள் அளித்த மனுவில், ‘‘பரமசாத்து கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் பகுதிக்கான மயானம் பொன்னை ஆற்றங்கரையில் உள்ளது. ஆற்றில் வெள்ளம் வரும்போது அடக்கம் செய்யப்பட்ட சடலங்கள் அடித்துச் செல்கின்றன. மேலும், சடலங்களை அடக்கம் செய்ய போதிய இடவசதியும் இல்லை. இதனால், சடலங்களை தோண்டி எடுத்து மீண்டும் அந்த இடத்தில் அடக்கம் செய்யும் நிலை உள்ளது. எனவே, மயானம் அமைக்க தேவையான இடம் தேர்வு செய்து தரவேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
தமிழக விவசாயிகள் சங்கத்தினர் அளித்த மனுவில், ‘‘தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், விவசாய மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திட்டம் விவசாயிகளுக்கு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, இந்த திட்டத்தை கைவிட வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
கருகம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘‘கருகம்புத்தூர் ஹாஜிபுரா, அம்பேத்கர் நகர் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. அந்த கம்பங்களை அகற்ற வேண்டும். எங்கள் பகுதியில் கழிவுநீர் தேங்கியுள்ளதுடன் குப்பையை சாலையோரம் கொட்டியுள்ளனர். உடனடியாக அதனை அகற்ற வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
காட்பாடி அடுத்த செம்மண்குட்டை பகுதியைச் சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘‘எங்கள் கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் உள்ளன. அனைவரும் விவசாயம் செய்து வருகிறோம். நாங்கள் தானியங்களை உலர வைக்க தனியாக நெற்களம் இல்லை. கிராமத்தில் 4 ஏக்கர் 25 சென்ட் நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். அந்த நிலத்தை மீட்டு எங்களுக்கு நெற்களம் அமைக்க வேண்டும். மேலும், தனியார் கட்டிடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். அப்பகுதி இளைஞர்கள் ராணுவத்தில் சேர பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்காக விளையாட்டு மைதானம் அமைத்துத்தர வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
கூட்டத்தில், பல்வேறு உதவிகள் கோரி மொத்தம் 555 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.