திருவண்ணாமலை: செய்யாறு அருகே சிப்காட் விரிவாக்க திட்டத்துக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என கருத்து தெரிவித்த திமுகவைச் சேர்ந்த ஆரணி மக்களவை உறுப்பினர் எம்.எஸ்., தரணிவேந்தன் மற்றும் செய்யாறு சட்டப்பேரவை உறுப்பினர் ஒ.ஜோதியின் உருவ பொம்மையை எரித்து நேற்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்மா உட்பட 9 ஊராட்சிகளில் 3,200 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி, சிப்காட் விரிவாக்கம் (3-வது அலகு) திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய 7 விவசாயிகள், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்தால் குண்டர் சட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற்றது. இருப்பினும், திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்து கடந்த 2 ஆண்டுகளாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அத்தி, இளநீர்குன்றம், நர்மாபள்ளம் உள்ளிட்ட 3 ஊராட்சிகளில் கையகப்படுத்த திட்டமிட்டுள்ள விவசாய நிலங்களில் உள்ள கிணறுகள் மற்றும் மரங்கள் உள்ளிட்டவற்றை மதிப்பீடு செய்ய, வருவாய் துறை அதிகாரிகள் கடந்த 14-ம் தேதி சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், தங்களது விவசாய நிலங்களில் அத்துமீறி நுழைந்ததாக கூறி, விவசாய நிலங்களில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் எனக்கூறி, அவர்களை விரட்டினர். அதிகாரிகளின் பாதுகாப்பு சென்ற காவல்துறையினரால், விவசாயிகளின் ஆவேசத்தால் திகைத்து நின்றனர்.
இதற்கிடையில் செய்யாறில் செய்தியாளர்களை கடந்த 15-ம் தேதி சந்தித்த திமுகவைச் சேர்ந்த ஆரணி மக்களவை உறுப்பினர் எம்.எஸ்.தரணி வேந்தன், செய்யாறு சட்டப்பேரவை உறுப்பினர் ஒ.ஜோதி ஆகியோர், “இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக சிப்காட் விரிவாக்க திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும். வெளி மாவட்ட நபர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தூண்டுதல் பேரில் போராட்டம் நடைபெறுவதாகவும், தரிசாக உள்ள நிலத்தை தான் கையகப்படுத்துவதாக கருத்து தெரிவித்தனர்.
மக்களவை உறுப்பினர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கத்தினர், இளநீர்குன்றம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு திரண்டனர். மேலும் அவர்கள், சிப்காட் விரிவாக்க திட்டத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் அவர்கள், மக்களவை உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன், சட்டப்பேரவை உறுப்பினர் ஒ.ஜோதி ஆகியோரது உருவ பொம்மைகளை எரித்து, தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். உருவ பொம்மைகளை எரிப்பதை தடுக்க முயன்ற காவல்துறையினர் மற்றும் விவசாயிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.