திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டி பகுதி காந்திரோட்டைச் சேர்ந்தவர் பிரித்திவிராஜ் (27). இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடன், ஒன்றாக பணியாற்றி வரும் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த தஸ்லீம் (27) என்பவர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததனர்.
இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி ஒசூரில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் செய்துகொண்டு பாதுகாப்பு கேட்டு ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று தஞ்சமடைந்தனர்.
இதையடுத்து, இரு குடும்பத்தாரையும் நேரில் வரவழைத்து பேசிய காவல் துறையினர் திருமணம் செய்து கொண்ட இருவரும் மேஜர் என்பதால் பெற்றோர் தரப்பில் எந்த எதிர்ப்பும் இனி இருக்கக்கூடாது என எச்சரித்து, மணப்பெண் விருப்பப்படி அவர் கணவருடன் அனுப்பி வைத்தனர்.