குடியிருப்பு பகுதியில் மின்தகன எரிமேடை அமைக்க எதிர்ப்பு: ராணிப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்


ராணிப்பேட்டை: புன்னை கிராம பொதுமக்கள் தங்கள் பகுதியில் மின்தகன எரிமேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நெமிலி பேருந்து நிலையம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சிக்கு உட்பட்ட புன்னை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் மின்தகன எரிமேடை அமையவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து, நெமிலி பேருந்து நிலையம் அருகே அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மின்தகன எரிமேடை வந்தால் காற்று மாசு படுவதோடு எங்கள் பகுதியில் உள்ள முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை நோய் தொற்று ஏற்படும் அச்சம் உள்ளது.

எனவே, ஊருக்கு ஒதுக்குப்புறமாக நவீன மின்தகன எரிமேடை அமைக்க வேண்டும். தற்போது, எரிமேடை அமையவுள்ள இடத்தில் அதற்கு பதிலாக இப்பகுதியில் பலர் வீட்டுமனை பட்டா இல்லாமல் உள்ளனர். எரிமேடை அமைக்கும் இடத்தில் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, பொதுமக்கள் அனைவரும் ஊர்வலமாக நடந்துச்சென்று பேரூராட்சி அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து மனுக்களை வழங்கினர்.

x