நாகர்கோயில்: முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன் ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு களியக்காவிளையில் இருந்து நாகர்கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். நாகர்கோவில் பால் பண்ணை அருகே கார் ஓட்டுநர் வேகத்தை குறைத்தபோது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், காரின் பின்புறம் மோதியது.
மோட்டார் சைக்கிளில் வந்த தென்காசியை சேர்ந்த கணேசன் (38), நாகர்கோவில் அருகே இருளப்பபுரம் ராஜ்குமார் (44) ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இவர்களில் கணேசன் மீது தனியார் சுற்றுலா பேருந்து மோதியதில் அவர் அங்கேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ராஜ்குமார் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். இவர்கள் இருவரும் பார்வதிபுரம் பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் பணிபுரிந்து வந்தனர் என்பது தெரியவந்துள்ளது.