தேனி அரசு பொறியியல் கல்லூரியில் விடுதி கழிவறையில் திருநெல்வேலியை சேர்ந்த மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை கோரி அவரது உறவினர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் பர்கிட் மாநகர் பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் விக்னேஷ் (21). தேனி மாவட்டம், போடி அரசு பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி இ.சி.இ., 3-ம் ஆண்டு படித்து வந்தார். தற்போது செமஸ்டர் தேர்வு நடந்து வரும் நிலையில், கடந்த 13-ம் தேதி விக்னேஷ் கல்லூரி விடுதியில் உள்ள சுகாதார வளாகத்துக்கு சென்றுள்ளார். ஆனால், நீண்டநேரமாகியும் அவர் அறைக்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த சக மாணவர்கள், விடுதி காவலருடன் கழிவறைக்கு சென்ற பார்த்த போது, உள்பக்கமாக பூட்டி இருந்தது.
நெடுநேரமாக கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து பார்த்தபோது விக்னேஷ் காயத்துடன் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறப்பில் சந்தேகம் இருப்பதாக மாணவரின் பெற்றோர் கூறியதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ஆர். சுகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றபோது, விக்னேஷின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விக்னேஷ் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நியாயமாக விசாரணை நடைபெறவில்லை என்பதால் இந்த வழக்கை சிபிசிஐடி எடுத்து விசாரணை நடத்த வேண்டும். மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஅவர்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, விக்னேஷ் குடும்பத்தினர் உள்ளிட்ட 5 நபர்களை மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தனர். பின்னர் அவர்கள் ஆட்சியரிடம் மனு அளி்த்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற திடீர் போராட்டத்தின் காரணமாக அங்கு செல்லும் சாலையில் தடுப்புகள் அமைத்து போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. இதனிடையே பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் மாணவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தனர்.
கொசு ஒழிப்பு பணியாளர்கள்
தமிழ்நாடு கொசு ஒழிப்பு மஸ்தூர் சங்க ஊழியர்கள் மாவட்ட தலைவர் எஸ். சிவமுருகன், மாவட்ட செயலாளர் எம். ஆறுமுகம், பொருளாளர் எஸ். சிவகாமி தலைமையில் அளித்த மனு: திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் 135 பேர் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வந்தோம். ஆனால் நேற்று முதல் 55 பேர் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டால்போதும் என்று கூறி விட்டனர். தற்போது மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் மற்றும் சளி காய்ச்சல் உள்ள பல்வேறு வகை காய்ச்சல் பரவி வரும் நிலையில் ஏற்கெனவே பணி செய்த 135 பேரையும் மீண்டும் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.