வரதட்சணை கேட்டு மனைவியை கொடூரமாக தாக்கிய கணவருக்கு 7 ஆண்டு சிறை: திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு


வரதட்சணை கேட்டு மனைவியை கொடூரமாக தாக்கிய கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

திருச்சி இ.பி காலனி ஆனந்தா நகரை சேர்ந்தவர் ராமர்(60) மகன் சங்கர் (36). இவருக்கும் குண்டூர் மேலத்தெருவை சேர்ந்த அன்னம்மாள் மகள் கோமதிக்கும் (28) கடந்த 2017 ஆண்டு ஜுன் 8ம் தேதியில் மாத்தூரில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் வரதட்சனையாக 15.5 பவுன் நகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை சங்கருக்கு அன்னம்மாள் கொடுத்துள்ளார். திருமணத்துக்கு பின்னர் மேலும் 9 பவுன் நகை தருவதாகக் கூறி இருந்த நிலையில், குடும்ப கஷ்டம் காரணமாக அன்னம்மாள் நகையை வாங்கித் தராமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், சங்கர், அவரது தாய் சரஸ்வதி, தங்கை சங்கீதா ஆகியோர் கோமதியிடம் வரதட்சணையாக நகை வாங்கி வருமாரு தொந்தரவு செய்துள்ளனர். இதில், 2020ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி சங்கர், கோமதியை கொடூரமாக தாக்கியதில் கோமதி சுயநினைவை இழந்தார். பின்னர் வலிப்பு வந்து கோமதி விழுந்துவிட்டதாக சங்கர் நாடகமாடி மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவரது தாயாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். கோமதி ஆபத்து கட்டத்தை கடந்தாலும், வாழ்நாள் முழுவதும் ‘வீல் சேரில்’ வாழ்கையை கழிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.

இது குறித்து அன்னாம்மாள் அளித்த புகாரின் பேரில் பொன்மலை அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து, சங்கரை கைது செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனா சந்திரா, குற்றம்சாட்டப்பட்ட சங்கருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட கோமதிக்கு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சங்கரின் பெற்றோர் ராமர், சரஸ்வதி, சங்கீதா ஆகிய மூவரும் விடுவிக்கப்பட்டனர். அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஹேமந்த் ஆஜரானார்.

x