பேருந்து நிழற்குடை கட்ட ரூ.25 லட்சம் செலவா? - கொந்தளிக்கும் மக்கள்; செங்கல்பட்டில் அதிர்ச்சி


செங்கல்பட்டு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பேருந்து நிறுத்தம்.

செங்கல்பட்டு: கடந்த 2019 நவம்பர் 29-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிகமாக செயல்பட்டது. பின்னர் அரசினர் தொழிற்பயிற்சி மையம் அருகே புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டது. திறப்பு விழா செய்யாமல் அரசு அலுவலகங்கள் கடந்த 2024 ஜனவரி முதல் நிர்வாகரீதியாக செயல்பட தொடங்கியது.

திறக்கப்படவே இல்லை.. இந்நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 2 பேருந்து நிறுத்த நிழற்குடைகள் தலா ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கட்டப்பட்டது. பேருந்து நிறுத்தம் கட்டி முடிக்கப்பட்டு சுமார் 3 மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆனால் 2024 அக்டோபர் மாதம் 8-ம் தேதி குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்ததாக கல்வெட்டு மட்டும் வைக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் பேருந்து நிறுத்த நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதைவிட அளவு குறைந்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கட்டப்பட்டுள்ள 2 பேருந்து நிறுத்த நிழற்குடைகள் தலா ரூபாய் 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இதனால், அரசு பணம் வீணடிக்கப்படுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வரதராஜன்

இதுகுறித்து சமூக ஆர்வலர் வழக்கறிஞர் வரதராஜன் கூறியது: செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம் அருகே கட்டப்பட்டுள்ள பேருந்து நிறுத்தம் அதிக அளவில் செலவு செய்து கட்டப்பட்டுள்ளது. இது வீண் செலவு தான். சென்னை போன்ற பெரிய நகரங்களிலேயே 10 லட்சத்துக்குள் பேருந்து நிறுத்தங்கள் கட்டப்படுகிறது. ஆனால் இங்கு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு, தேவையான நிதியை மட்டுமே ஒதுக்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றார்

ஊரக வளர்ச்சித் துறை பொறியாளர் ஒருவர் கூறும்போது, பேருந்து நிறுத்த நிழற்குடையை ரூபாய் 4 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரை கட்டலாம். பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் சற்று கூடுதல் செலவாகும். கிராமப்புற நிறுத்தங்களில் குறைவான செலவிலும் நகரப்புறங்களில் கட்டப்படும் பேருந்து நிறுத்த நிழற்குடைகள் அதிக செலவிலும் கட்டப்படுகிறது. எவ்வளவு மதிப்புக்கு கட்டப்பட வேண்டும் என்பதை சட்டமன்ற உறுப்பினர்தான் முடிவு செய்வார். அவர் நிதி என்பதால் அவரே முடிவு செய்வார் என்றார்.

x