மேடவாக்கம் அருகே வடக்குப்பட்டில் பழுதடைந்த சாலை: சீரமைக்க கோரிக்கை


செங்கல்பட்டு: மேடவாக்கம் அருகே வடக்குப்பட்டில் பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறிய சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், புனித தோமையார் மலை ஒன்றியம் மேடவாக்கம் ஊராட்சி வடக்குப்பட்டு 1-வது வார்டில் உள்ள நடேசன் நாயக்கர் தெரு வடக்குப்பட்டு - கோவிலம்பாக்கம் சத்திய நகர் இணைப்பு சாலையாக உள்ளது.

இந்நிலையில் பராமரிப்பு இல்லாததால் சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் பரவி காணப்படுவதோடு குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவர் கூறியது: வடக்குப்பட்டு மற்றும் கோவிலம்பாக்கம் என இரண்டு கிராம மக்கள் பயன்படுத்த கூடிய சாலை மோசமாக உள்ளது. மேடவாக்கம் - மவுண்ட் சாலை மெட்ரோ ரயில் பணி நடப்பதால் இந்த சாலையை அதிகளவில் மக்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் சாலையில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியோர்கள், வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளங்களால் வாகனத்தை இயக்குவதில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இரவு நேரங்களில் சைக்கிள், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனுஅளித்தும் பலன் அளிக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்களின் நலன் கருதி பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சாலையை சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

x