ஈரோடு: தாளவாடி மலைக்கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள முட்டைக்கோஸ் கிலோ ரூ 2-க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தாளவாடி மலைப்பகுதியில் முட்டைக்கோஸ், பீன்ஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.
தற்போது தாளவாடி, நெய்தாளபுரம், தலமலை, திகினாரை, மல்லன் குழி, பையனாபுரம்,பனஹள்ளி, சூசை புரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முட்டைக்கோஸ் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் முட்டைக்கோஸை விவசாயி களிடமிருந்து வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். தாளவாடி சுற்றுவட்டார கிராமங்களில் தற்போது ஒரே நேரத்தில் முட்டைக்கோஸ் அறுவடை தொடங்கியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் சாகுபடி செய்த விவசாயிகள், அதிர்ச்சி அடையும் வகையில் முட்டைக்கோஸ் விலை கிலோ ரூ.2-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
இதுகுறித்து தாளவாடி விவசாயிகள் கூறியதாவது: மூன்று மாத பயிரான முட்டைகோஸ், ஒரு ஏக்கரில் பயிரிட ரூ.80 ஆயிரம் வரை செலவாகிறது. இந்நிலையில், ஒரு கிலோ முட்டைக்கோஸ் ரூ.10-க்கு விற்பனையானால் மட்டுமே விவசாயிகள் நஷ்டமடையாத நிலை ஏற்படும். ஆனால், தற்போது தாளவாடிக்கு முட்டைக்கோஸ் கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகள், கிலோ ரூ.2 என விலை நிர்ணயம் செய்கின்றனர். இதனால், அறுவடை செய்யும் கூலிக்கு கூட கட்டுப்படியாகாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. விலை சரிவின் காரணமாக, பல விவசாயிகள் அறுவடை பணிகளை நிறுத்தி வைத்துள்ளனர், என்றனர்.
இதுகுறித்து கரளவாடியைச் சேர்ந்த விவசாயி நந்தீஸ் கூறும்போது, "ஒரு ஏக்கரில் 25 ஆயிரம் முட்டைக்கோஸ் நாற்று நட முடியும். ஒரு நாற்றின் விலை ப்பி 75 பைசா என்ற அடிப்படையில் நடவுக்கூலி உட்பட ரூ.25 ஆயிரம் செல்வாகிறது. இதன்பிறகு I உரம், பூச்சிக்கொல்லி மருந்து என ரூ.45 ஆயிரம், களை எடுத்த மற்றும் றும் அறுவடைக்கு என ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ.85 ஆயிரத்துக்கு மேல் செலவாகிறது.
ஒரு ஏக்கரில் 25 ஆயிரம் முட்டைக்கோஸ் நாற்று நட்டால், அதில் 70 சதவீத விளைச்சல் கிடைக்கும். அதாவது 20 ஆயிரம் கிலோ முட்டைக்கோஸ் அறுவடை செய்ய வாய்ப்புள்ளது. கிலோ ரூ.2-க்கு கொள்முதல் செய்தால், மொத்தமே ரூ.40 ஆயிரம் மட்டுமே எங்களுக்கு கிடைக்கும். ஒரு ஏக்கர் முட்டைக் கோஸ் பயிரிட்ட விவசாயிக்கு, ரூ.40 ஆயிரம் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது" என்றார்.
ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்படும் காய்கறிச்சந்தையில் சராசரியாக ஒரு கிலோ முட்டைக்கோஸ் ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனையாகிறது. இதில் பாதி விலை கூட பயிரிடும் விவசாயிகளுக்குகிடைப்பதில்லை என்பது வேதனையான விஷயமாக பார்க்கப்படுகிறது. மலைப்பகுதியான தாளவாடி வட்டார கிராமங்களில் விளையும் தக்காளி, முட்டைக் கோஸ் போன்ற காய்கறிகளை கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகள் தங்களுக்குள் ஒப் பந்தம் போட்டுக்கொண்டு மிகக் குறைந்த விலைக்கு கொள் முதல் செய்வதாக விவசாயி கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அரசின் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறையினர் முட்டைக்கோஸ்க்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்து, உழவர் சந்தை மற்றும் சிந்தாமணி போன்ற கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்ய முன்வர வேண்டும். அதேபோல, அதிக விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒரே நேரத்தில் ஒரேவகையான பயிரை விவசாயிகள் பயிரிடும் சூழல் மலைக் கிராமங்களில் உள்ளது. இதனை மாற்றி, எந்தெந்த பருவ காலங்களில் எத்தகைய காய்கறிகள் மற்றும் பயிர்களை பயிரிடலாம் என வேளாண்மைத்துறை வழிகாட்டவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மலைக் கிராம விவசாயிகளிடம் உள்ளது.