கிருஷ்ணகிரி: ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி ச்செயலாளர்களை பணியிடம் மாற்றம் செய்ய அரசாணை வெளியிட்டும், பணியிட மாற்றம் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் 2004-ம் ஆண்டு உதயமானது. இதில், 10 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 333 ஊராட்சிகள் உள்ளன. இம்மாவட்டத்தில் கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி ஆகிய பகுதி மலை மற்றும் வனம் சார்ந்த பகுதியாகவும் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ளன. இப்பகுதி மலைவாழ் மக்கள் பொருளாதாரம், கல்வியில் பின்தங்கியுள்ளனர். மேலும், இக்கிராமங்களில் அடிப்படை வசதிகள் இன்று வரை கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
கிராம மக்கள் தங்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ஊராட்சிகளை நாடி வருகின்றனர். ஊராட்சிகளில் குடிநீர், தெருவிளக்கு , சாலை பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள், மத்திய, மாநில அரசு திட்டங்களைச் செயல்படுத்துதல், நிதி பரிவர்த்தனை உள்ளிட பணிகளில் ஊராட்சிச் செயலாளர்கள் பங்கு மிக முக்கியமாக உள்ளது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் பணிபுரியும் செயலாளர்கள் 5 ஆண்டுகள் முதல் 36 ஆண்டுகள் வரை ஒரே ஊராட்சியில் பணிபுரிந்து வருவதால், இக்கிராமங்கள் வளர்ச்சி பணியில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும், வளர்ச்சித் திட்டப்பணிகளில் முறைகேடு அதிகரித்து வருவதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக மலைக் கிராம மக்கள் கூறியதாவது: கெலமங்கலம், தளி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில், ஊராட்சிச் செயலாளர்கள் உள்ளூர் ஆளும் கட்சியினர் ஆதரவில் தொடர்ந்து ஒரே ஊராட்சியில் பணிபுரிந்து வருகின்றனர். ஊராட்சியின் அனைத்து பணிகளும் இவர்கள் அனுமதி அளித்தால் மட்டும் நிறைவேற்றப்படும் என்ற விதிமுறை உள்ளதால், இவர்களில் பலர் குறுநில மன்னர்கள்போல செயல்படுகின்றனர். மேலும், அரசின் திட்டங்கள் உரியவர்களுக்குச் சென்று சேர்வதிலும், திட்டப் பணிகள் தரமாக நடப்பதும் கேள்விக்குறியாக இருந்து வருவதோடு, பல்வேறு முறைகேடுகளும் நடந்து வருகின்றன.
தற்போது, ஊராட்சித் தலைவர்களின் பதவிக் காலம் கடந்த ஜனவரி 5-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், எல்லா பணிகளுக்கும் ஊராட்சி செயலாளர்களை நம்பியிருக்கும் நிலையுள்ளது. பல ஆண்டுகளாக பணிபுரியும் செயலாளர்கள் பணியிடம் மாறுதல் செய்ய அரசாணை வெளியிட்டும், இடமாறுதல் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, ஊராட்சிச் செயலாளர்களை பணியிடம் மாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பணியிடம் மாற்றத்துக்கு விரைவில் நடவடிக்கை
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிலர் கூறியதாவது: கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 28 ஊராட்சிகளில் 25 ஊராட்சிச் செயலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், ஒரே ஊராட்சியில் 36 ஆண்டுகளாக ஒருவரும். 20 முதல் 27 ஆண்டுகள் வரை 15 பேரும், மீதமுள்ளவர்கள் 1 முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்து வருகின்றனர்.
இதேபோல, தளி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் பல ஆண்டுகளாக ஊராட்சிச் செயலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை பணியிடம் மாற்றம் செய்ய கடந்தாண்டு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து, ஊராட்சிச் செயலாளர்களை பணியிடம் மாற்றம் செய்ய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் பணியிடம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.