சேலம்: பெத்தநாயக்கன் பாளையம் அருகே மலைக் கிராமத்தில், டாஸ்மாக் மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த மலைவாழ் மக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெத்தநாயக்கன் பாளையம் அருகே கல்வராயன் மலையில் உள்ள கருமந்துறையை அடுத்த குன்னூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட மலைவாழ் மக்கள் 20-க்கும் மேற்பட்டோர், தங்கள் கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிப்பதற்கு திரண்டு வந்தனர்.
கூட்டமாக வந்தவர்களில், ஒரு சிலர் மட்டும் ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் சென்று கோரிக்கை மனு அளிக்கலாம் என்று போலீஸார் கூறினர். ஆனால், மலைவாழ் மக்கள், தாங்கள் அனைவரும் உள்ளே சென்று, கோரிக்கையை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி, ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அருகே தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, சிலர் மட்டும் ஆட்சியர் அலுவலகம் சென்று மனு அளித்தனர்.
கோரிக்கை மனு குறித்து குன்னூர் மலைக் கிராம மக்கள் கூறியதாவது: கல்வராயன் மலையில் உள்ள குன்னூர் மலைக் கிராமத்தில், 700 குடும்பத்தினர் வசிக்கிறோம். அனைவரும் கூலி வேலைக்குச் செல்பவர்கள். போதிய வேலைவாய்ப்பு இல்லாததால், பலரும் வேலைதேடி கர்நாடகா, கேரளா என அண்டை மாநிலங்களுக்குச் சென்றுள்ளனர். இங்கு மக்களுக்கு கழிவறை வசதி, பேருந்து நிழற்கூடம், சாலை வசதி போன்றவை கிடையாது.
சுற்று வட்டாரத்தில் உள்ள அடியானூர், நாகலூர் உள்பட பல கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர், குன்னூர் அரசுப் பள்ளிக்கு பேருந்துகளில் வந்து செல்கின்றனர். இந்நிலையில், குன்னூரில் டாஸ்மாக் மதுக்கடையை அமைத்தால், மக்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி, குடும்பங்கள் பாதிக்கப்படும். மேலும், பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, குன்னூரில் டாஸ்மாக் மதுக்கடையை அமைக்கக் கூடாது, என்றனர்.
சேலத்தாம்பட்டியில் எதிர்ப்பு
சேலம் அருகே சேலத்தாம்பட்டி கிராமத்தில், புதியதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கக் கூடாது என வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனு குறித்து அவர்கள் கூறுகையில், சேலத்தாம்பட்டியில் பொதுமக்களின் வீடுகளும், ரேஷன் கடைகளுக்கான உணவு தானியக் கிடங்கும் உள்ளன. இங்கு டாஸ்மாக் மதுக்கடை திறந்தால், குற்றச்செயல்கள் அதிகரித்துவிடும். மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன், ரேஷன் கடைகளுக்கு உணவு தானிய மூட்டைகளைக் கொண்டு செல்வது பாதிக்கப்படும். எனவே, டாஸ்மாக் மதுக்கடையை அமைக்கக் கூடாது, என்றனர்.