ஈரோடு அதிர்ச்சி: அந்தியூர் அருகே சட்டவிரோத மின்வேலியில் சிக்கி ஆண் யானை மரணம்; விவசாயி கைது


ஈரோடு: அந்தியூர் அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு இருந்த மின்சார வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவம் குறித்து வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள், இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதுகுறித்து விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அத்தாணி, காக்காச்சி குட்டை பகுதியைச் சேர்ந்த சின்னச்சாமி என்ற விவசாயி, பொன்னாச்சி அம்மன் கோயில் வனப்பகுதியை ஒட்டியுள்ள தனது நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். யானைகள் கரும்பு தோட்டத்திற்குள் புகுந்து சேதப்படுத்துவதைத் தடுக்க, சட்டவிரோதமாக மின்வேலி அமைத்துள்ளார்.

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை, இந்த மின்வேலியில் சிக்கி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தது. இதையடுத்து அங்கு வந்த வனத்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள், மின் இணைப்புகளைத் துண்டிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் வாக்குவாதம்

அப்போது அங்கு திரண்ட விவசாயிகள், மின்சாரத்தை துண்டிக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாவட்ட வன அலுவலர் கே.வி.நாயுடு-வை முற்றுகையிட்ட விவசாயிகள், யானை உயிரிழந்த சம்பவத்தில் விவசாயி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்த நிலையில், மின்சாரத்தை எதற்காக துண்டிக்கிறீர்கள் எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், யானைகளை விவசாய நிலங்களுக்குள் புகாமல் தடுப்பதற்கு வனத்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனக் கேள்வி எழுப்பிய விவசாயிகள், மனித உயிர்களைக் காக்க வனத்துறை தவறி விட்டதாக குற்றஞ்சாட்டினர்.

யானை இறந்ததைக் காரணம் காட்டி மின்சாரத்தை முழுமையாகத் துண்டித்தால், தண்ணீர் பாய்ச்சாமல், பயிர்கள் வாடி விடும். யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள், வனப்பகுதியை விட்டு வெளியேறுவதைத் தடுக்க சூரிய ஒளி மின்வேலி அமைத்தும்,‌ அகழிகளை வனத்துறையினர் அமைக்க வேண்டும். யானைகள் விளை நிலங்களில் நுழையும் போது அதனை விரட்ட போதுமான பணியாளர்களை வனத்துறை நியமிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

x