புதுச்சேரி: ஒன்றாம் வகுப்பு பயிலும் 6 வயது சிறுமியிடம் தனியார் பள்ளி ஆசிரியரின் பாலியல் அத்துமீறல் சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதே நேரத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி தவளக்குப்பம் அருகே தானம்பாளையம் தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் 6 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார். அதிர்ச்சியும் ஆவேசமும் அடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளி நிர்வாகம் மற்றும் காவல் துறையின் அலட்சியத்தை கண்டித்தும், பள்ளி தாளாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடந்த 14ம் தேதி மாலையில் தவளக்குப்பம் நான்முனை சந்திப்பில் சுமார் 6 மணி நேரத்துக்கும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்குள் புகுந்து பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.
இதனால் கடலூர் - புதுச்சேரி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அப்பகுதியில் பதற்றமான சூழலும் நிலவியது. இச்சம்பவம் தொடர்பாக தவளக்குப்பம் போலீஸார் தனியார் பள்ளி ஆசிரியர் மணிகண்டன் (25) மீது போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதனிடையே பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென வலியுறுத்தி, புதுச்சேரி, தமிழகத்தைச் சேர்ந்த 18 மீனவ கிராம பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரைத் தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளியின் தாளாளர், பள்ளி முதல்வர் மற்றும் சம்மந்தப்பட்ட அனைவரும் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று தீர்மானம் நிறைவேற்றினர். இதன் நகலை போலீஸ் அதிகாரிகளிடம் வழங்கினர்.
நல்லவாடு, மூர்த்திக்குப்பம் புதுக்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கரைகளில் வரிசையாக நிறுத்தி வைத்துவிட்டு வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். மாணவர்களின் நலன் கருதி பள்ளியை உடனடியாக திறக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அரசியல் தலையீடுகள் இன்றி விசாரணை நடைப்பெற வேண்டும். இதுவரை நடைப்பெற்ற விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும். போக்சோ சட்டத்தில் உரிய விசாரணைக்குப் பின்னரே ஒருவரை கைது செய்ய வேண்டும் என்று வலியறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் கடலூர் - புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போக்குவரத்து போலீஸார் வாகனங்களை வேறு வழியில் மாற்றவிட்டனர். மறியல் போராட்டம் குறித்து அறிந்த துணை ஆட்சியர் இஷிதா ரதி, வட்டாட்சியர் பிரித்திவி மற்றும் தவளக்குப்பம் போலீஸார் சம்பவ இடத்துகு்கு வந்து மறியலில் ஈடுபட்ட மணவர்கள், ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனையேற்ற அவர்கள் சுமார் ஒன்றரை மணி நேரத்தக்கு பிறகு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன்பிறகு போக்குவரத்து படிப்படியாக சீரானது.