திருப்பூரில் தார் சாலைகள் தரமற்ற முறையில் உள்ளன: மாவட்ட ஆட்சியரிடம் புகார்


திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடந்தது.

இதில், பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் ஆ.அண்ணாதுரை விபத்தால் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் பாதிப்பை சித்தரிக்கும் வகையில் தலை, கைகளில் கட்டு போட்டபடி நூதனமாக வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் முழுவதும் மாநில நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான தார் சாலைகள் தரமற்ற முறையில் உள்ளன. ஓராண்டுக்குள் தார் சாலைகள் குண்டும், குழியுமாகி வருகின்றன. முறையாக செப்பனிடாத நிலையில், வாகன ஓட்டிகள் வளைந்து நெளிந்து செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன.

பல்லடம் நகரில் இருந்து செட்டிபாளையம் சாலையில் அறிவிப்பு பலகை இல்லாமலும், தார் சாலையில் உள்ள வேகத்தடை மீது சரியாக வண்ணம் பூசப்படாத காரணத்தால் 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்தில் சிக்கின. இதன் பிறகு, தற்போது வேகத்தடை மீது வண்ணம் பூசப்பட்டுள்ளது. வேகத்தடை அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை. இதனால் கடந்த 2 நாட்களில் 4 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கடந்து செல்லும் பல்லடம் சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர், மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க பல்வேறு முயற்சிகளை செய்து வரும் நிலையில் மாநில நெடுஞ்சாலைத் துறையினர் கவனக்குறைவுடன் செயல்படுகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

திருக்குமரன்நகா் பகுதி பொதுமக்கள் அளித்த மனு: திருப்பூர் மாநகராட்சி 5-வது வார்டு எல்லைக்கு உட்பட்ட வாவிபாளையம் திருக்குமரன்நகா் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் சார்பாக மத்திய, மாநில அரசின் மானியத்தில் ஏழை, எளிய மக்களுக்காக மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காகவும், நொய்யல் ஆற்று கரையோரத்தில் வசித்த வந்த மக்களுக்காக வழங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறோம். எங்கள் குடியிருப்புக்கு தடையின்மை சான்று வழங்கும்போது, வீட்டு வரி தொடா்பாக எந்த அறிவிப்பும் தெரிவிக்கவில்லை.

எங்களுக்கு சங்கம் தொடங்கி பராமரிப்பு தொகை என்ற பெயரில் ஒரு குடியிருப்புக்கு மாதம் ரூ.250 வசூலிக்கப்படுகிறது. ஆனால் அதற்கான பராமரிப்புகள் எதுவும் சரியான முறையில் செய்யப்படவில்லை. பராமரிப்புக்கு உண்டான அரசு மானியத்தை பெற்றுத்தர வேண்டும். வீட்டு வரியை பாதி அளவாக குறைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளா் தமிழ்வேந்தன் கொடுத்த மனுவில், திருப்பூர் மாவட்டத்தில் தொடா்ச்சியாக நாள்தோறும் டன் கணக்கில் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. இது சம்பந்தமாக ஏற்கெனவே மனு கொடுத்துள்ளோம். அது தொடா்பாக அதிகாரிகள் கண் துடைப்புக்கு சிலர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடத்தலில் ஈடுபடுகிற முக்கியமான குற்றவாளிகளை கைது செய்யவில்லை. ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுகிறவா்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் ரேஷன் கடை ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்காக 350 மனுக்களை ஆட்சியர் பெற்றார்.

x