சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே மேம்பாலத்தில் தாம்பரம் மார்க்க பாதை நாளை திறப்பு


சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஜிஎஸ்டி சாலை - ஒரகடத்தை இணைக்கும் மேம்பாலத்தில் ஒரு பகுதியின் பணி முடிவடைந்து நாளை திறக்கப்பட உள்ளது. | படம்: எம்.முத்துகணேஷ் |

சிங்கபெருமாள் கோவில்: சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதால் தாம்பரம் மார்க்க மேம்பாலத்தை நாளை திறக்கப்படவுள்ளது.

செங்கை புறநகர் பகுதிகளில் வளர்ந்து வரும் முக்கிய நகரமாக சிங்கப்பெருமாள் கோவில் உள்ளது. சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு வந்து செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.

இங்கு சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையிலுள்ள ரயில்வே கேட் வழியாக, தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் பகுதியிலுள்ள தொழிற்சாலைகளுக்கு சென்று வருகின்றன.

இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கடந்த 2008-ம் ஆண்டு, ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. பல்வேறு காரணங்களால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

இந்நிலையில் மீண்டும் 2021-ல் புதிதாக டெண்டர்' விடப்பட்டு ரூ. 138.27 கோடி மதிப்பில், அதே ஆண்டு நவம்பரில் பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கின. 30 மாதங்களுக்குள் மொத்த பணிகளும் முடிக்க வேண்டும் என கால நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் பணிகள் முடிக்கப்படவில்லை.

30 ஆண்​டுகால கனவு: இந்நிலையில் தற்போது தாம்பரம் மார்க்கத்தில் மேம்பால பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதால் தாம்பரம் மார்க்க பாதை பிப். 19-ம் தேதி (நாளை) திறக்கப்படவுள்ளது. இதில் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த பாதை திறக்கப்பட்டால் இந்த பகுதியில் 60 சதவீத போக்குவரத்து நெரிசல் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. 30 ஆண்டுகால கனவு நிறைவேறியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

x