சென்னை: திருமண நிகழ்ச்சிக்காக சென்னைக்கு வந்தபோது தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி தவறவிட்ட 40 பவுன் தங்க நகைகளை நேர்மையுடன் காவல் துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
சென்னை முகப்பேர் கிழக்கு, பாரதிதாசன் சாலையைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சரவணன் (40). இவர் கடந்த 15-ம் தேதி வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரை அரும்பாக்கத்திலிருந்து அவரது ஆட்டோவில் சவாரி ஏற்றிச் சென்று, அண்ணாநகரில் இறக்கிவிட்டு சென்றார்.
பின்னர், சரவணன் ஆட்டோவை ஓட்டிச் செல்லும்போது அவரது ஆட்டோவின் பின் சீட்டில் ஒரு பை இருப்பதைக் கண்டார். அந்த பையை எடுத்துப் பார்த்தபோது, அதில், தங்க நகைகள் மற்றும் செல்போன் இருந்தது தெரியவந்தது. உடனே சரவணன் அந்த பையை அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீஸார் விசாரணை செய்து, தங்க நகைகள் அடங்கிய பையை தவறவிட்ட தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நித்தேஷ் (39), அவரது தந்தை பண்டிட் நேரு, நித்தேஷின் மனைவி ஆகியோரை கண்டுபிடித்து, ஆட்டோ ஓட்டுநர் சரவணன் மூலம் அவர்கள் மூவரையும் பார்த்து உறுதி செய்துகொண்டு, 40 பவுன் நகைகள், செல்போன் அடங்கிய பையை அவர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
இந்த தகவலை அறிந்த காவல் ஆணையர் அருண், நேர்மையுடன் செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் சரவணனை நேற்று நேரில் அழைத்துப் பாராட்டி சான்றிதழ் அளித்தார்.
பெண் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு: இதேபோல், 2020-ம் ஆண்டு, திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 10 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது தொடர்பாக திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுக் கொடுத்தனர். இவ்வழக்கை சிறப்பாக கையாண்டு தண்டனை பெற்றுக் கொடுத்த காவல் ஆய்வாளர் மகாலட்சுமியையும் காவல் ஆணையர் நேற்று நேரில் அழைத்துப் பாராட்டினார்.