முதல்வர் ஸ்டாலின் தவறான தகவல்களை தெரிவித்து வருகிறார்: எல்.முருகன் குற்றச்சாட்டு


திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்த மத்திய அமைச்சர் எல்.முருகன். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். இதையடுத்து திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் . பின்னர் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசி விசுவநாதர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். அப்போது இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியமும் உடனிருந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் எல்.முருகன் கூறியதாவது: சைவ வழிபாட்டு தலமான திருப்பரங்குன்றத்தில் சமீபகாலமாக சிலர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 1931-ம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்பில் ஒட்டுமொத்த மலையில் 33 சென்ட் தவிர்த்து எஞ்சியுள்ள மொத்த மலையும் முருகப்பெருமானுக்கு சொந்தம் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தீர்ப்புக்கு மாறாக வருவாய் ஆவணங்களில் திருப்பரங்குன்றம் மலை என்பதற்கு பதிலாக 1983-ல் சிக்கந்தர் மலை என தமிழக அரசு தவறாக குறிப்பிட்டுள்ளது.

மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என 30 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். மலை உச்சியில் இந்து சமய அறநிலையத் துறை கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என 1994-ல் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையை அறநிலையத் துறை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

கிராமங்களில் கருப்பசாமி, மதுரை வீரன் போன்ற கிராம தெய்வங்களை போற்றும் வகையில் பிராணிகளை பலியிடுவது வழக்கம். திருப்பரங்குன்றம் கோயில் சைவ திருத்தலம். சைவ, வைணவ தலங்களில் பலியிடுதல் கிடையாது. அப்படியிருக்கும்போது திருப்பரங்குன்றம் மலையின் மீது விரும்பத்தகாத சம்பவங்களை நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை ஒரே நாளில் கொண்டு வரப்பட்டது அல்ல. 40 ஆண்டுகளுக்கு பிறகு இன்றைய காலத்துக்கு ஏற்ப, உலக அளவில் போட்டிபோடும் அளவில் இந்திய மாணவர்களை தயார் செய்யும் பொறுப்பு நமக்கு உள்ளது. தாய்மொழியில்தான் பயில வேண்டும் என்பதைத்தான் புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. புதிய கல்விக் கொள்கைக்கு முதலில் சம்மதம் தெரிவித்துவிட்டு தற்போது எதிர்க்கின்றனர்.

தமிழகத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களுக்கு ரூ.11 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தவறான தகவல்களை தெரிவித்து வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்

x