கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அரசியல் கட்சியினர் வளாகத்துக்குள் கொடிகளுடன் பேரணி செல்வது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பது போன்ற விதிமீறல் செயல்கள் தொடர்கிறது. இதில் காவல் துறை அலட்சியம் காட்டக் கூடாது என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.17) நடந்தது. மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மொத்தம் 681 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
தொடர்ந்து, மூன்று பயனாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும், எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்த 3 நபர்களின் குடும்பத்தினருக்கு, சமூகப் பாதுகாப்பு திட்டம் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் நிவாரண தொகையாக தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.3 லட்சத்துக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
முன்னதாக, கோவை பி.என்.புதூர் குட்டை, மடத்தூர் குட்டை, முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் சாந்தி முருகன், பொதுமக்களுடன் இணைந்து மனு அளித்தார். அதேபோல் தமிழக வெற்றி கழகத்தின் மாநகர் மாவட்ட செயலாளர் சம்பத் தலைமையில் அக்கட்சியினர் கோவை ரயில் நிலையம், அரசு மருத்துவமனை முன் பொதுமக்கள் பாதுகாப்பாக சாலையை கடக்க சுரங்க நடைபாதை, நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
கண்காணிப்பு பணியில் அலட்சியம் காட்டும் போலீஸார்: வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் திங்கட்கிழமை வழக்கத்ததை விட கூடுதல் போலீஸார் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சியினர் கொடிகளுடன் ஊர்வலமாக சென்று மனு வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பிரதான நுழைவாயில் பகுதியில் கண்காணிப்பு பணியை போலீஸார் சரிவர மேற்கொள்வதில்லை.
இதனால் அரசியல் கட்சியினர் தொண்டர்கள், பொதுமக்களுடன் பேரணியாக கொடிகளுடன் உள்ளே செல்வது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பது போன்ற விதிமீறல்கள் தொடர்கின்றன. இன்று கூட கம்யூனிஸ்ட் கட்சி, தவெக போன்ற கட்சியினர் விதிமீறல்களில் ஈடுபட்டனர். அபாயகரமான பொருட்கள் உள்ளே கொண்டு செல்லப்படுவதை தடுக்க, பொதுமக்களிடம் காட்டும் அதே கெடுபிடியை அரசியல் கட்சியினர் மத்தியிலும் போலீஸார் செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.