சென்னை: போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரி மாணவர் மர்ம மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் நஜ்மா பேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலியை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி 3ஆம் ஆண்டு பயின்று வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 13 அன்று, கல்லூரி வளாகத்தில் உள்ள கழிவறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
மாணவனின் உடலில் உள்ள காயங்கள் மற்றும் அவர் இறந்து கிடந்த கழிவறையில் காணப்பட்ட ரத்தங்கள் மூலம், மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். அதனடிப்படையில் மாணவரின் மரண வழக்கை முறையாக பதிவு செய்து, உடற்கூராய்வை வீடியோ பதிவு செய்திடவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவனின் உடலில் உள்ள காயங்கள் மற்றும் இரத்த போக்கிற்கு காரணமாக, மாணவன் வலிப்பு வந்து இறந்திருக்கலாம் என்றும், எறும்பு கடியால் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ரத்தம் வெளியேறி இருக்கலாம் என்றும், உடற்கூறாய்வுக்கு முன்பே காவல்துறையே வலிய கருத்துக்களை திணிக்க முற்படுவதாகவும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். காவல்துறையின் இத்தகைய நடவடிக்கை ஏற்புடையதல்ல.
ஆகவே, மாணவர் விக்னேஷ் மரண வழக்கில் உண்மையை கண்டறியும் வகையில், அவரது பெற்றோர்களின் கோரிக்கை படி, வழக்கு விசாரணையை மேற்கொள்ள வேண்டும், மாணவர் மரணத்தில் ஏதேனும் சதிச் செயல்கள் உள்ளனவா என்பதையும் காவல்துறை கண்டறிய வேண்டும் எனவும் எஸ்டிபிஐ கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.