சென்னை: வெளி மாநில பயணி ஆட்டோவில் தவறவிட்ட 40 சவரன் தங்க நகைகள் அடங்கிய பையை நேர்மையுடன் காவல் துறை மூலம் வெளி மாநில பயணியிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை காவல் ஆணையாளர் அருண் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் வெளியான செய்திக்குறிப்பில், ”சென்னை, முகப்பேர் கிழக்கு, பாரதி தாசன் சாலையை சேர்ந்த ஜோதி வேல் மகன் சரவணன் (40) என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி 15ம் தேதி அன்று மாலை வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரை அரும்பாக்கத்தில் இருந்து அவரது ஆட்டோவில் (பதிவு எண். TN 13 AF 3742) சவாரியாக ஏற்றிச் சென்று, அண்ணா நகரில் இறக்கிவிட்டு விட்டு சென்றார்.
பின்னர் சரவணன் ஆட்டோவை ஓட்டி செல்லும்போது அவரது ஆட்டோவின் பின் சீட்டில் ஒரு பை இருப்பதை கண்டு, அந்த பையை எடுத்து பார்த்தபோது, அதில் தங்க நகைகள் மற்றும் செல்போன் இருந்தது தெரியவந்தது. உடனே சரவணன் மேற்படி தங்க நகைகள் மற்றும் செல்போன் அடங்கிய பையை நேர்மையுடன் அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அண்ணாநகர் காவல் நிலைய போலீசார் அண்ணாநகர் பகுதியில் விசாரணை செய்து, மேற்படி 40 சவரன் தங்க நகைகள் அடங்கிய பையை தவறவிட்ட தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நித்தேஷ் (39), அவரது தந்தை பண்டிட் நேரு, நித்தேஷின் மனைவி ஆகியோரை கண்டுபிடித்து விசாரணை செய்ததில், மூவரும், சென்னையில் நடைபெறும் உறவினர் திருமணத்திற்காக சென்னைக்கு வந்து, ஆட்டோவில் செல்லும்போது தங்க நகைகள் அடங்கிய பையை தவறவிட்டது தெரியவந்தது.
மேலும், அவர்கள் கூறிய பை மற்றும் தங்க நகைகளின் அடையாளங்களை வைத்தும், ஆட்டோ ஓட்டுநர் சரவணனை கொண்டு மூவரையும் பார்த்து உறுதி செய்தும், மேற்படி தங்க நகைகள் அடங்கிய நித்தேஷ் குடும்பத்தினருடையது என உறுதி செய்யப்பட்டு, மேற்படி 40 சவரன் தங்க நகைகள் மற்றும் செல்போன் அடங்கிய பை அதன் உரிமையாளர் நித்தேஷிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. மேற்கண்ட பயணி ஆட்டோ ஓட்டுநருக்கும், சென்னை பெருநகர காவல் துறையினருக்கும் உளமகிழ்ந்து நன்றி தெரிவித்தார்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.