சிவகங்கை: ஒக்கூர் அண்ணாநகரைச் சேர்ந்த தம்பதி சன்னாபாபு - திவ்யா. இவர்களது குழந்தை தனஸ்ரீ (4). இக்குழந்தையை ஜனவரி 16-ம் தேதி இரவு விஷப்பாம்பு கடித்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தைகள் நல அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், அதற்குள் விஷம் நரம்பு மண்டலத்தை பாதித்து குழந்தை சுயநினைவை இழந்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அக்குழந்தைக்கு மூச்சுக் குழாயில் துளையிட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. பின்னர், 24 மணி நேர மருத்துவக் குழுவினர் கண்காணிப்பில் இருந்த அக்குழந்தை முழுமையாக குணமடைந்தது. இதையடுத்து, மருத்துவக் குழுவினருக்கு பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
சிறப்பாகச் செயல்பட்டு குழந்தையை காப்பாற்றிய குழந்தைகள் நலப்பிரிவு பேராசிரியர்கள் சிவக்குமார், பாலசுப்பிரமணியன், வனிதா, மயக்கவியல் பேராசிரியர் வேல்முருகன், காது - மூக்கு - தொண்டை பேராசிரியர்கள் நாக சுப்பிரமணியன், விஜய் பாபு மற்றும் உதவிப் பேராசிரியர்கள், செவிலியர்கள் ஆகியோரை மருத்துவக் கல்லூரி டீன் சத்திய பாமா, மருத்துவமனைக் கண்காணிப்பாளர் கண்ணன், நிலைய மருத்துவ அலுவலர் மகேந்திரன், உதவி அலுவலர்கள் ரபிக், தென்றல் ஆகியோர் பாராட்டினர்.
இதனிடையே, பிப்ரவரி 14-ம் தேதி அக்குழந்தை தனது 4-வது பிறந்த நாளை மருத்துவமனையில் மருத்துவக் குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியது.